Published : 12 Apr 2020 03:00 PM
Last Updated : 12 Apr 2020 03:00 PM

கரோனா அமெரிக்க உயிரிழப்பு விகிதமும், இந்திய உயிரிழப்பு விகிதமும் ஒன்றாக உள்ளது: முகக்கவசத்தை கட்டாயமாக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

இந்தியாவின் உயிரிழப்பு விகிதம் மற்ற நாடுகளைவிட அதிகமாக உள்ளது என கவலை தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ் கரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“இந்தியாவில் ஊரடங்கு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றுடன் 19 நாட்கள் ஆகும் நிலையில், ஊரடங்கை மீறி சாலைகளில் மக்கள் நடமாடுவது நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. சமூக இடைவெளி இல்லாத மனித நடமாட்டம் கரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படும் நிலையில், அதை தடுக்க வாய்ப்புள்ள மாற்று நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்வது கட்டாயமாகியுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக ஆயிரம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. நேற்றிரவு நிலவரப்படி கரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை தேசிய அளவில் 8,380 ஆகவும், தமிழக அளவில் 969 ஆகவும் இருந்தது.

அதேபோல், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. கடந்த 9-ம் தேதி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸ் இறப்புகளின் எண்ணிக்கை 169 ஆக இருந்தது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 287 ஆக அதிகரித்துள்ளது. அதாவது இரு நாட்களில் இந்தியாவின் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 118 அதாவது 69.82% அதிகரித்துள்ளது. இது மிக மிக கவலையளிக்கக்கூடிய புள்ளிவிவரம் ஆகும்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில், உயிரிழப்புகளின் விகிதம் 1.03% ஆகும். அதேநேரத்தில் இந்தியாவில் இந்த அளவு 3.42 விழுக்காடாக உள்ளது. இது உலக சாராசரியை விட அதிகம் ஆகும். உலக அளவில் கரோனா வைரஸ் உயிரிழப்புகள் நிகழ்ந்த 63 நாடுகளில், 35 நாடுகளை விட அதிக விழுக்காட்டிலான உயிரிழப்புகள் இந்தியாவில் நிகழ்ந்து வருகின்றன.

இதில் அதிர்ச்சியளிக்கும் உண்மை என்னவென்றால் அமெரிக்காவின் உயிரிழப்பு விகிதமும் (3.85%), இந்திய உயிரிழப்பு விகிதமும் (3.42%) கிட்டத்தட்ட ஒன்றாக உள்ளது. கனடா, ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளை விட இந்தியாவின் உயிரிழப்பு விகிதம் மிகவும் அதிகம் ஆகும். இந்திய உயிரிழப்பு விகிதம் பாகிஸ்தானை விட இரண்டரை மடங்காகவும், நார்வேயை விட இரு மடங்காகவும் உள்ளது.

இத்தகைய சூழலில் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். கரோனா வைரஸ் நோய் பாதித்தவர்கள் பலருக்கு அதற்கான அறிகுறிகள் எதுவுமே தெரியாமல் இருக்கக்கூடும். கரோனா வைரஸ் பாதித்திருப்பது அவர்களுக்கே தெரியாது என்பதால், அவர்கள் சுதந்திரமாக நடமாடக்கூடும்.

அவர்கள் மூலம் கரோனா வைரஸ் பரவும் ஆபத்து உள்ளது என்பதால் தான் அனைவரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அனைவரும் முகக்கவசம் அணியும் பட்சத்தில், அவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு கரோனா வைரஸ் பரவும் ஆபத்து தடுக்கப்படும்.

கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் உன்னத பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் ஒவ்வொரு நாளும் ஏராளமானவர்களை எதிர்கொள்கின்றனர். அவர்களில் எவருக்கேனும் கரோனா தொற்று இருந்து, அவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால், அவர்கள் மூலமாக மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கும் கரோனா தொற்றக்கூடும்.

சிலரின் அலட்சியத்தால் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களும், காவலர்களும் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக்கூடாது. இந்த ஆபத்தை உணர்ந்து தான் உலகில் அமெரிக்கா, செக் குடியரசு, ஆஸ்திரியா, ஜெர்மனி, நியுசிலாந்து, தென்கொரியா, சீனா, ஜப்பான், தாய்லாந்து, மொராக்கோ உள்ளிட்ட நாடுகளில் வெளியில் நடமாடுபவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் தில்லி, மராட்டியம், பஞ்சாப், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகரில் முகக்கவசம் அணியாமல் வருவோர் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 188-ன் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல், தமிழகத்திலும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி தமிழக அரசு ஆணையிட வேண்டும். முகக்கவசத்திற்கு பற்றாக்குறை இருக்கும் பட்சத்தில் வீட்டில் துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை கூட அணியலாம். இம்மாத இறுதியில் கரோனா பதற்றம் தணிந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டால் கூட அடுத்த ஒரு மாதத்திற்கு அனைவரும் முகக்கவசம் அணிவதை தமிழக அரசு கட்டாயமாக்க வேண்டும்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x