Last Updated : 30 Aug, 2015 11:46 AM

 

Published : 30 Aug 2015 11:46 AM
Last Updated : 30 Aug 2015 11:46 AM

கண்டுகொள்ளப்படாத செல்போன் கோபுரங்களை காப்பாற்றுங்கள்: தஞ்சையைச் சேர்ந்த அமைப்பின் வேண்டுகோள்

கதிர்வீச்சால் மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் அபாயம் உள்ள தாகக் கூறி நாடு முழுவதும் செல் போன் கோபுரங்களுக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில், ஆர்வக்கோளாறான சில மனிதர் களிடமிருந்தும், நிறுவிய பின்னர் கண்டுகொள்ளாத நிறுவனங்க ளிடமிருந்தும் செல்போன் கோபுரங் களை காப்பாற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளது ஒரு அமைப்பு.

தஞ்சையை தலைமையிட மாகக் கொண்டு செயல்படும், ‘தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க வாடகைக்கு இடம் அளித்தோர் மற்றும் சுற்றுச்சூழல் நலன் காப்போர் நலச் சங்கம்’ என்ற அமைப்பின் நிறுவனத் தலைவ ரான பா.செந்தில்குமார், பல ஆண்டு களாக இதுகுறித்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

அண்மைக்காலமாக போராட் டக்காரர்களின் விளையாட்டுக் களமாக மாறி வரும் செல்போன் கோபுரங்களின் யதார்த்த நிலை குறித்து அவர் ‘தி இந்து’விடம் தெரிவித்ததாவது:

இதற்கு முன்னர் அங்கொன்றும் இங்கொன்றுமாக செல்போன் கோபுரங்களின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். காந்திய வாதி சசிபெருமாள், மது விலக்கை அமல்படுத்தக் கோரி, நாகர்கோவிலில் உள்ள செல் போன் கோபுரத்தின் மீதேறி உயிரி ழந்ததைத் தொடர்ந்து, செல்போன் கோபுரங்கள் மீது ஏறி மிரட்டல் விடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

எந்தப் போராட்டமாக இருந் தாலும், செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தன்னை வெளியுலகுக்குக் காட்ட முயற்சிப்பதும், மீடியாக்க ளுக்கு போஸ் கொடுப்பதும் அதிகரித்துவிட்டது. போராட்டம் நடத்த எத்தனையோ வடிவங்கள் உள்ளன. பலரின் வேலையைக் கெடுத்து, மற்றவர்களின் கவ னத்தை ஈர்க்க இதுபோல செயல் படும் நபர்கள், தனது உயிரோடு விளையாடுவது மட்டுமல்லாமல், மற்றவர்களின் உயிருக்கும் உலைவைக்கக் கூடிய ஆபத்துகள் உள்ளதை இத்தகையோர் உணர வேண்டும்.

பெரும்பாலான செல்போன் கோபுர வளாகங்கள் பூட்டப்படாம லும், அதன் படிக்கட்டுகள் திறந் தும், பாதுகாவலர்கள் இல்லாம லும் உள்ளன. மின்சார இணைப்பு களும் அலங்கோலமாக உள்ளன. மெயின் பெட்டிகள், மீட்டர் பெட்டி கள், ஃபியூஸ் கேரியர்கள் திறந்தே கிடக்கின்றன. சில இடங்களில் வயர் கம்பியால் ஃபியூஸ் இணைப்பு கொடுத்துள்ளனர். கோபுரங்களின் அடிக்கால்களும், படிக்கட்டுகளும், ஆன்டெனாக்களும் துருப்பிடித்து பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருக்கின்றன. இது போன்ற நிலையில், அத்துமீறி நுழைபவர்களால், மின்சார தாக்குதல்கள், படிக்கட்டுகள், ஆன் டெனாக்கள், கோபுரங்கள் உடைந்து விழக்கூடிய ஆபத்து கள் உள்ளன. அப்போது, அந்த நபருக்கும், அவரைக் காப் பாற்ற முனைபவர்களுக்கும், கோபு ரங்கள் நிறுவப்பட்ட பகுதியில் வசிப்பவர்களுக்கும் பேராபத் துகள் உருவாகக்கூடும்.

முறைப்படி பார்த்தால் இந்த செல்போன் கோபுரங்களின் மீது ஏறி போராட வேண்டிவர்கள் நாங்கள் தான்.

இடத்தை வாடகைக்கு கொடுத்துவிட்டு நாங்கள் படும் அவஸ்தை சொல்லி மாளாது. நாங்களே சம்பந்தப்பட்ட நிறுவனங் களுக்கு கடிதம் எழுதியும், நேரில் பேசியும் தீர்வுகாண முயலும் போது, தொடர்பே இல்லாதவர்கள் இதுபோல செயல்படுவது சரியா என்பதை யோசிக்க வேண்டும் என்றார் அவர்.

நிறுவனங்களின் அலட்சியம்

பா.செந்தில்குமார் மேலும் கூறியது: நிறுவனங்களுக்கு, கோபுரங்களை அமைக்கும்போது இருந்த ஆர்வம் இப்போது இல்லை. இதனால் அவர்களுக்கு நிறைய லாபம் வருகிறது. ஆனால், கோபுரம் அமைக்க இடம் தந்தவர்களுக்கு முறையாக வாடகை தராமலும், ஒப்பந்தம் முடிந்தும் இடத்தை காலி செய்யாமலும், அதற்கு வாடகை தராமலும் நிறுவனங்கள் நடந்துகொள்கின்றன.

கதிர்வீச்சு வெளிப்படுகிறதா?

“செல்போன் கோபுரங்களில் கதிர்வீச்சு வெளிப்படுகிறது என்று கூறுகின்றனர். கோபுரம் உள்ள இடத்தில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய், குழந்தை ஊனமாகப் பிறப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் செல்போன் பயன்பாட்டுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இதுவரை முறையான ஆய்வுகள் இல்லை.

செல்போன் கோபுர கதிர்வீச்சு குறித்த பி.கே.கோயல் என்பவரின் ஆய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி, ராஜஸ்தான் உயர் நீதிமன்றம், மக்கள் நெருக்கம் உள்ள இடங்களில் இருந்த செல்போன் கோபுரங்களை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என 2012, ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

மருத்துவமனைகள், பள்ளிகள் அருகில் செல்போன் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என்ற அரசின் வழிகாட்டுதலும் மீறப்படுகிறது. செல்போன் கோபுரங்கள் அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடுப்பவர்களைகூட, அச்சுறுத்தும் வகையில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஓய்வுபெற்ற எஸ்பி, டிஎஸ்பி-க்களை விசாரணை அதிகாரிகள் என்ற பெயரில் அனுப்பி மிரட்டுகின்றன” என்கிறார் பா.செந்தில்குமார்.

என்ன செய்ய வேண்டும்?

இந்த செல்போன் கோபுரங்களின் நிலை குறித்து பல முறை முதல்வர், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், காவல் துறை இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. இனியாவது, செல்போன் கோபுரங்கள் உள்ள இடங்களில் காவலர்களை கட்டாயம் நியமிக்க வேண்டும். தொடர்பில்லாதவர்கள் மேலே ஏற முடியாத வகையில், படிக்கட்டுகளுக்கு பூட்டுடன் கூடிய கதவு அமைக்க வேண்டும். முள் கம்பி வேலிகள் அமைக்க வேண்டும்.

போராட்டம் என்ற பெயரில் செல்போன் கோபுரங்கள் மீது ஏறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களால், ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், இடத்தின் உரிமையாளரை தொடர்புபடுத்தக்கூடாது. செல்போன் டவர்கள் தொடர்பான பிரச்சினைகளைக் களைய மாநில அளவில் வாரியம் அமைக்க வேண்டும். வாடகை ஒப்பந்தங்களை தமிழில் அச்சிட்டுத் தர வேண்டும். மத்திய அரசு, செல்போன் கோபுரங்களில் அபாயகரமான கதிர்வீச்சு வெளிப்படுகிறதா என்பதை முறையான ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும்" என்கிறார் செந்தில்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x