Published : 03 Apr 2020 02:49 PM
Last Updated : 03 Apr 2020 02:49 PM

கர்நாடக அரசு போல் ஏழை, எளியோருக்கு இலவசமாக பால் வழங்க வேண்டும்; பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை

ஆவின் பால்: கோப்புப்படம்

சென்னை

கர்நாடக அரசுபோல் ஆவின் நிறுவனத்தின் மூலம் ஏழை, எளியோருக்கு இலவசமாக பால் வழங்க வேண்டும் என, தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி இன்று (ஏப்.3) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் பாதிப்பு பொதுமக்களிடையே பரவாமல் தடுக்க சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் வகையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் சூழலில் 100% தேநீர் கடைகளும், 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட மளிகைக் கடைகளும் தமிழகம் முழுவதும் மூடப்பட்டு விட்டதால் தற்போது தமிழகத்தில் பால் விற்பனை என்பது வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

பால் விற்பனை வீழ்ச்சியின் காரணமாக தனியார் பால் நிறுவனங்கள் வேறு வழியின்றி தங்களின் கொள்முதல் நிலையங்களுக்கும், தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கும் விடுமுறை விடுகின்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் உற்பத்தியாளர்களிடம் பாலினை கொள்முதல் செய்யாமல் பால் நிறுவனங்கள் விடுமுறை விடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதால் தற்போது பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு மாட்டின் மடியில் இருந்து பாலை கறக்காமல் விட்டு விடவும் இயலாமல், கறந்த பாலினை பாதுகாக்கவும், விற்பனை செய்யவும் முடியாமல் ஆறுகளிலும், வயல்வெளிகளிலும் கொட்டுகின்ற நிலையை காணொலிகளில் காணும் போது சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களாகிய நாங்கள் எங்களது இதயத்தைக் கத்தி கொண்டு குத்திய வேதனையை அனுபவித்து வருகிறோம்.

இந்த சூழ்நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பாலினை கர்நாடகா அரசு தனது கூட்டுறவு நிறுவனமான 'நந்தினி பால் நிறுவனம்' மூலம் உற்பத்தியாளர்களிடமிருந்து தங்கு தடையின்றிக் கொள்முதல் செய்து அதனை அம்மாநில ஏழை, எளிய மக்களுக்கு தற்போது இலவசமாக வழங்கி வருகிறது.

அதன் காரணமாக அங்கே பல லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்து வருவதோடு, பொதுமக்களுக்கும் பால் தட்டுப்பாடின்றி கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

எனவே, தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய இயலாத பாலினை தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் மூலம் தங்கு தடையின்றி முழுமையாக கொள்முதல் செய்து அதனை ஏழை, எளிய மக்களுக்கும், 144 தடை உத்தரவு காரணமாக தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் தினக்கூலிகளான அனைத்துத் துறைகளிலும் உள்ள அமைப்புசாரா, உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் இலவசமாக வழங்கிட முன் வர வேண்டும்.

அண்டை மாநில அரசுகள் செய்கின்ற நல்ல விஷயங்களை நகல் எடுத்து அதனை தமிழக அரசு பின்பற்றுவதன் மூலம் பொதுமக்கள் பலனடைவதோடு பால் உற்பத்தியாளர்களும் பயன் பெறுவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x