Published : 03 Apr 2020 01:28 PM
Last Updated : 03 Apr 2020 01:28 PM

தினமும் 300 பேருக்கு உணவு; 20 பேருக்கு அரிசி, மளிகைப் பொருட்கள்: கரோனா காலத்தில் ஆதரவில்லாதவர்களை காக்கும் மதுரை திருநகர் இளைஞர்கள் 

மதுரை 

இருக்கிறவர்கள் இல்லாதவர்களுக்கு உதவுவதே இந்த ‘கரோனா’ காலத்தில் நெகிழ்ச்சியாக பேசப்படுகிறது.

ஆனால், மதுரை அருகே எந்த பொருளாதாரப் பின்னணியும் இல்லாத இளைஞர்கள் ஒன்று கூடி விஷேச வீட்டிற்கு சமைப்பதுபோல் ஆதரவற்றவர்கள் 300 பேருக்கு தினமும் உணவு சமைத்து தேடிச் சென்று கொடுக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கூலித்தொழிலாளர்கள் மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் 20 பேருக்கு தினமும் மளிகைப் பொருட்களை வழங்கி ‘கரோனா’ ஹீரோக்களாக வலம் வருகிறார்கள்.

மதுரை அருகே திருநரைச் சேர்ந்த இளைஞர்கள் ‘திருநகர் பக்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தையும், மரம் வளர்ப்பின் அவசியம் பற்றியும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

வாரத்தில் 6 நாட்கள் குடும்பத்திற்காக உழைக்கும் இந்த இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை கடப்பாறை, மம்பட்டியை எடுத்துக் கொண்டு ஊருக்காக உழைக்கப் புறப்பட்டு விடுகிறார்கள். மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, ஆதரவற்றவர்களை அரவணைப்பது, சாலைகளில் அடிப்படும் விலங்குகளை மீட்டு சிகிச்சை அளித்து மீண்டும் அதன் வாழ்விடங்களில் கொண்டு போய்விடுவது,

பேரிடர் காலங்களுக்கு பொதுமக்களுக்கு உதவுவது, என்று தங்கள் அன்றாட வாழ்க்கை பயணத்திற்கு இடையே எதையும் எதிர்பார்க்காத இவர்களது சமூகப்பணி பொதுமக்களை கவர்ந்துள்ளது. இவர்களது சமூக பணியில் 5 வயது முதல் 60 வயது வரையிலான களப்பணியாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது ‘கரோனா’ பரவும் நிலையில் வீடில்லா ஆதரவற்றவர்கள் 300 பேருக்கு இவர்களே உணவுகளை சமைத்து வழங்குகிறார்கள். திருமண வீடுகளில் சமையல் ஆட்கள் வேலை சய்வதுபோல் இவர்கள் ஒன்றாக அமர்ந்து காய்கறி நறுக்கி, குழம்பு வைத்து, சாதம் வடித்து உணவு தயார் செய்கின்றனர்.

சமைத்த உணவை ‘பார்சல்’ தயார் செய்து தங்கள் வானகங்களில் அதை எடுத்துக் கொண்டு ஆதரவற்றவர்களை தேடிச்சென்று வழங்குகிறார்கள்.

செல்லும் வழியில் மக்களுக்காக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார், சுகாதார களப்பணியாளர்களுக்கும் வாஞ்சையோடு இந்த உணவு பொட்டலங்களை வழங்குகிறார்கள்.

‘கரோனா’ வைரஸ் பரவும்நிலையில் மக்கள் வெளியே வரவே அச்சப்படும் இந்த சூழலில் இவர்களோ பாதுகாப்பாக குடும்பத்துடன் இருக்காமல் ஆதரவற்ற மனிதர்களுக்காக உழைக்கிறார்கள்.

அதுபோல், மக்கள் வீடுகளில் முடங்கியதால் உணவில்லாமல் தவிக்கும் தெருநாய்களையும் அவரணைத்து அதற்கும் உணவுகள் வழங்குகிறார்கள். மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், கிராம புற கலைஞர்கள், எச்ஐவி, காசநோயால் பாதிக்கப்பட்டோரை தேடிச் சென்று அவர்களுக்கான மளிகைப்பொருட்கள், பருப்பு, அரிசி போன்றவற்றையும் வழங்குகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை இந்த இளைஞர்கள் சத்தமில்லாமல் செய்து வருகிறார்கள்.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஷ்வா கூறுகையில், ‘‘உதவி என்பது, தேவைப்படுகிற நேரத்தில் தேவை இருப்பவர்களுக்கு செய்வதுதான். அதை யாராவது செய்வார்கள் என்று ஒதுங்கி நிற்காமல் செய்கிறோம்.

எங்கள் சமூகப்பணிகளை அறிந்தவர்கள் ஆதரவற்றவர்களுக்கு உதவ எங்களுக்கு உதவுகிறார்கள். அவர்களிடம் இருந்து பெற்று இல்லாதவர்களுக்கு வழங்குகிறோம்.

காவல்துறையினர், மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் உயிரை பனையம் வைத்து ‘கரோனா’ பணி மேற்கொள்கிறார்கள். நாங்களும் பொதுமக்களுக்கு, உயிரை பணையம் வைத்து பேரிடர் காலங்களில் உதவியுள்ளோம்.

அந்த அனுபவத்தில் கிடைத்த நம்பிக்கையாலே இந்த அசாதாரண சூழலில் அச்சமில்லாமல் இப்பணியை மேற்கொள்கிறோம். அதற்காக எங்கள் குழுவில் நல்ல உடல் ஆரோக்கியுமுள்ளவர்களை தேர்வு செய்து அவர்களை மட்டுமே இந்த பணியில் ஈடுபடுத்துகிறோம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x