Published : 26 Mar 2020 05:34 PM
Last Updated : 26 Mar 2020 05:34 PM

10% எங்களையும் பாராட்டலாமே; தூய்மைப் பணியாளர் உருக்கம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ

10% எங்களையும் பாராட்டலாமே என்று தூய்மைப் பணியாளர் உருக்கமாகப் பேசும் வீடியோ இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கரோனா வைரஸ் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 693 ஆக உயர்ந்துள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார் பிரதமர் மோடி. இதனால் மக்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மட்டும் இரவு, பகல் பாராமல் தொடர்ச்சியாக பணியாற்றி வருகிறார்கள். தெருக்கள் தோறும் கிருமி நாசினி தெளிப்பு, சுத்தம் செய்வது எனத் தொடர்ச்சியாகத் தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால், சமூக வலைதளத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் உழைப்பை மட்டும் பலரும் பாராட்டி வந்தார்கள். தூய்மைப் பணியாளர்களின் பணி குறித்து பலரும் பாராட்டவில்லை.

இதனிடையே, இது தொடர்பாக இன்று (மார்ச் 26) காலை முதலே ட்விட்டர் தளத்தில் தூய்மைப் பணியாளர் ஒருவரின் வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து தூய்மைப் பணியாளர்களையும் பலர் பாராட்டத் தொடங்கியுள்ளனர்.

பெயர் வெளியிட விரும்பாத தூய்மைப் பணியாளர் வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது:

"ஒரு சின்ன மெசேஜ். நிறையப் பேர் ஸ்டேட்ஸ்களில் காவல் துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரைப் பாராட்டிப் போடுகிறீர்கள். அவர்களை நானும் பாராட்டுகிறேன், இல்லையென்று சொல்லவில்லை. அதேவேளையில் எங்களை மாதிரியான தூய்மைப் பணியாளர்களையும் 10 சதவீதம் பாராட்டலாமே. ஏனென்றால் எங்களுக்கும் விடுமுறையே கிடையாது.

வர்தா புயல் வந்தாலும் விடுமுறையே கிடையாது. இரவு - பகலாக வேலை செய்து வருகிறோம். புயல் வந்து தண்ணீர் சூழ்ந்த போது எங்களிடம் இரவு - பகல் எல்லாம் வேலை வாங்கினார்கள். அதெல்லாம் சலித்துக் கொள்ளாமல் செய்கிறோம். தேர்தல் சமயத்திலும் நாங்கள்தான் வேலை செய்கிறோம். காலரா வந்தாலும் எங்களைத்தான் இரவு, பகலுமாக வேலை வாங்குகிறீர்கள். டெங்கு காய்ச்சல் என்றாலும் எங்களைத் தான் இரவும் பகலுமாக வேலை வாங்குகிறீர்கள். மலேரியா என்றாலும் நாங்கள்தான் வேலை செய்கிறோம்.

நாங்கள் செய்கிறோம். உங்களிடம் என்ன கேட்கிறோம் என்றால், அனைவரையும் பாராட்டுகிறீர்கள். இல்லையென்று சொல்லவில்லை. காவல் துறையினர், மருத்துவர்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவர்கள்தான். அதே சமயம் 10 சதவீதமாவது எங்களையும் பாராட்டினால் நன்றாக இருக்கும். அதைப் பார்க்கும் எங்களை மாதிரியான ஆட்கள் சந்தோஷப்படுவார்கள்.

ஊரடங்கு உத்தரவு என்றார்கள். ஆனால், எங்களை மட்டும் 1:30 மணி வரை வேலை செய்யச் சொல்கிறார்கள். மக்களுக்கு நல்லது என்பதற்காகவே செய்கிறோம். அதேசமயம் நாங்களும் மக்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். 10% பாராட்டியிருந்தால் எங்களுக்கும் மனது கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்கும். இது எனக்குள் இருக்கும் சின்ன ஃபீலிங்தான். என்னடா இது எல்லாரையும் பாராட்டுகிறார்கள், நம்மளும் வேலை செய்கிறோமே. நம்மளை ஏன் பாராட்டவில்லை என்ற எண்ணம்தான். பாராட்டுத் தேவையில்லைதான். மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, அதனால் தான். ஏதேனும் தவறாகப் பேசியிருந்தால் மன்னிக்கவும்".

இவ்வாறு அந்தத் தூய்மைப் பணியாளர் பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x