Published : 25 Mar 2020 07:35 AM
Last Updated : 25 Mar 2020 07:35 AM

தாம்பரம், மதுரை, கோவை, தஞ்சையில் தனிமை வார்டுகள் அமைக்க ரூ.110 கோடி: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தாம்பரம், மதுரை, கோவை, தஞ்சை அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கவும் சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து நிலைய ஆய்வகத்தை மேம்படுத்தவும் ரூ. 110 கோடி வழங்கப்படும் என்றுமுதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் அமைந்துள்ள வெள்ளையத்தேவன் மணி மண்டபத்தில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும். பத்திரிகையாளர் நல நிதியத்தில் இருந்து பணிக் காலத்தில் சிகிச்சை பெறும் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ நிதியுதவி ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும். தூத்துக்குடிராவ் பகதூர் குரூஸ் பர்ணாந்தீஸின் பிறந்த நாள் (நவம்பர் 15)ஆண்டுதோறும் பாளையங்கோட்டையில் அரசு விழாவாக கொண்டாடப்படும்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொழிற் பூங்காவில் முதற்கட்டமாக சுமார் 650 ஏக்கர் நிலப்பரப்பில் மருத்துவ மூலப்பொருட்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தொடங்க ஏதுவாக சிப்காட் நிறுவனத்தால் ரூ.770 கோடியில் மருந்தியல் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.

தாம்பரம் அரசு நெஞ்சக நோய் மருத்துவமனை, மதுரை தோப்பூரில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனை, கோவை அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தஞ்சை செங்கிப்பட்டியில் உள்ள மகாத்மா காந்தி நினைவு காசநோய் சானடோரியம் ஆகியமருத்துவமனைகளில் கரோனா வைரஸ் சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கவும் சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் உள்ள ஆய்வகத்தை மேம்படுத்தவும் ரூ.110 கோடி வழங்கப்படும்.

ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை துரிதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வான்வழி அவசர கால சேவை ரூ.10 கோடியில் தொடங்கப்படும். ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும், உண்டு உறைவிட பள்ளிகளில் தங்கி கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கான உணவுத்தொகை ரூ.900-ல் இருந்து ரூ.1,000ஆகவும் கல்லூரி மாணவர்களுக்கான உணவுத் தொகை ரூ. 1,000-ல்இருந்து ரூ.1,100 ஆகவும் உயர்த்தப்படும்.

தமிழ்நாடு உயர் கல்வி மன்ற வளாகத்துக்கு டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயரிட்டு,அங்கு ஜெயலலிதாவின் திருவுருவச் சிலை அமைக்கப்படும். சிப்காட் சிறுசேரி, நாவலூர் ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்தி, கரையினை உறுதிப்படுத்தி, நடைபாதை வசதி, சைக்கிள் பாதை வசதிகளுடன் பூந்தோட்டத்துடனான இயற்கை பூங்கா ரூ. 50 கோடியில் அமைக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையின்றி தண்ணீர் வழங்க, நாளொன்றுக்கு 20 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையம்ரூ.110 கோடியில் நிறுவப்படும்.

சென்னைக்கு அருகில் உள்ள சிப்காட் மாநல்லூர் தொழிற்பூங்காவில் ரூ.148 கோடியில் மின்சார வாகனப் பூங்கா உருவாக்கப்படும். மின்சார வாகன உற்பத்திக்குத் தேவையான தொழில் நுட்ப ஆய்வு மையம், சோதனை மையம், கிடங்கு வசதி மற்றும் கனரக வாகனங்கள் நிறுத்தும் வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இப்பூங்கா அமையும்.

சிப்காட் நிறுவனம் புதிதாக அமைக்கவுள்ள மாநல்லூர், செய்யாறு, மணப்பாறை, தேனி,மணக்குடி மற்றும் சக்கரக்கோட்டை ஆகிய தொழிற் பூங்காக்களில் ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் வேளாண்மை ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி நிதி உதவியுடன் ரூ.2 ஆயிரத்து 934 கோடியில் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

வணிகம் மற்றும் நிறுவன தகவல்களை சேமித்தல், மீட்டெடுத்தல், தகவல் தொழில்நுட்ப பயன்பாடுகளை செயல்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் தொழில் நிறுவனங்கள் அமையும் வகையில், பெரும்புதூர் வட்டத்தில் உள்ள நெமிலி, மன்னூர் கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 500 கோடியில் தரவு மைய பூங்காவை டிட்கோ உருவாக்கும். இதன் மூலம் சுமார் 3,500 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும்.

புத்தாக்கங்கள் மற்றும் அறிவுசார் நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆதரித்து, புதிய தொழில்களை உருவாக்கும் நோக்கத்துடன், உட்கட்டமைப்பு சேவைகள், வணிகச் சூழலுடன் கூடிய ஒரு புத்தொழில் மற்றும் புத்தாக்க நகரம் ரூ. 350 கோடியில் சென்னையில் அமைக்கப்படும்.

கோவை மாவட்டம், சூளூர் வட்டம், கல்லப்பாளையம் கிராமத்தில் 116.24 ஏக்கரில் ரூ. 20 கோடியே 96 லட்சத்தில் கொடிசியா மூலம் புதிய தனியார் தொழிற்பூங்கா அமைக்கப்படும். இத்திட்டத்துக்கு அரசின் மானியமாக 10 கோடி ரூபாய் வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை – 2019-ன்படி தமிழகத்தில் மின்சார வாகன உபகரணங்கள் உற்பத்தி செய்யும் மற்றும் மின்சாரம் ஏற்றும் கட்டமைப்புக்கு தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்ய தொடங்கப்படும் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், அதிகபட்சமாக ரூ. 50 லட்சம் வரை, 25 சதவீதம் வரையும், அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் ரூபாய் வரையும், தகுதி வாய்ந்த இயந்திர தளவாடங்களின் மதிப்பில் 20 சதவீதம் வரையும் கூடுதல் சிறப்பு மூலதன மானியம் வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x