Published : 24 Mar 2020 03:46 PM
Last Updated : 24 Mar 2020 03:46 PM

144 தடை உத்தரவு; பொதுமக்கள் என்ன செய்யவேண்டும்? முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தல்

144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணிக்கு மேல் அமலாவதால், பொதுமக்கள் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் சில வழிகாட்டுதல்களைத் தெரிவித்தார்.

கரோனா பரவலைத் தடுக்க சுயக் கட்டுப்பாடு அவசியம், 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும் நிலையில் பொதுமக்கள் இதை எப்படி எதிர்கொள்வது என்பன உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ள நிலையில் அதை எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் முதல்வர் பேசியதாவது:

''மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விளக்கமாக தெளிவாக கரோனா வைரஸ் நோயினுடைய தன்மையைத் தெரிவித்திருக்கின்றார். ஏற்கெனவே தமிழக அரசு கரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து செயல்படுத்தி கொண்டு இருக்கிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. அதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும். இந்த கரோனா வைரஸ் தொற்று நோயைப் பொறுத்தவரைக்கும் வேகமாகப் பரவக்கூடிய ஒரு நோய். சுமார் 187 நாடுகளிலே இந்த நோய் பரவியிருக்கின்றது.

மாவட்ட எல்லைகள் மூடுவது மட்டுமல்ல, பொதுமக்கள் தங்கள் வீட்டிலேயே இருந்து தங்களைத் தனிமைப்படுத்தி இந்த நோயைத் தடுக்கின்ற பணிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன். அதோடு அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லலாம்.

கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல நோய் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களைச் சந்தித்து, பரிசோதனை செய்து, அந்த நோயினுடைய தன்மையை அறிந்து, அவர்கள் உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இத்தருணத்திலே கேட்டுக் கொள்கிறேன்.

இது ஒரு கொடிய நோய், தொற்று நோய். ஆகவே இந்த நோய் வந்தவர்கள் பிறரிடம் பேசுவதோ, தொடர்பு வைத்துக் கொள்ளவோ கூடாது. இது வேகமாகப் பரவக்கூடிய நோயாக இருக்கின்ற காரணத்தினாலே, அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தங்களை முழு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

முழு பரிசோதனை செய்து கொண்டால்தான், மற்றவர்களுக்கு அந்த நோய் வராமல் தடுக்க முடியும். அந்த நோய் வருவதற்கு உண்டான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவர்களைச் சந்தித்து, மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்று குணமடையலாம்.

தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் எங்களுடைய அரசு, முழு மூச்சுடன் இன்றைக்கு வெளிநாட்டிலிருந்து வருகின்ற பயணிகளை பரிசோதனை செய்து, அந்தப் பரிசோதனையிலே நோய் கண்டறியப்பட்டால், அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை அளித்து, குணமடையக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்குகின்றோம்.

இந்நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கூட நம்முடைய மருத்துவர்கள் தகுந்த சிகிச்சை அளித்த காரணத்தினாலே அவர் குணமடைந்து இருக்கிறார். ஆகவே, பாதிக்கப்பட்டவர்கள் அச்சப்படத் தேவையில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கென்று தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையிலே சேர்ந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கின்றேன். எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களில் சில பேர் காய்ச்சலுக்காக இருக்கின்ற மாத்திரையை உட்கொள்வதன் காரணத்தினாலே இந்தப் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியவில்லை.

இன்னும் சிலபேர் பெங்களூரூவில் இறங்கி, நமது மாநிலத்திற்கு வந்துவிடுகிறார்கள். அதோடு, வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் இந்தியாவில் உள்ள பிற விமான நிலையங்களிலிருந்து இறங்கி நமது மாநிலத்திற்கு வந்துவிடுகிறார்கள். அவர்களை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்படி வெளிநாட்டிலிருந்து விமானம் மூலமாக பிற மாநிலத்திலிருந்து வந்தவர்கள் வீட்டிலே இருந்தாலும் உடனடியாக அருகில் இருக்கின்ற மருத்துவமனைக்கு சென்று, தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டுமென்று அன்போடு அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல அரசு, வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை தனிமைப்படுத்தி இருக்கின்றது. அவர்களும் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கின்றேன். இதற்காக 24 மணிநேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறையை அரசு உருவாக்கி இருக்கின்றது.

ஏதாவது நோய் தென்பட்டால் உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, அவர்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இதை எல்லாம் இவ்வளவு வலியுறுத்திச் சொல்வதற்கு காரணம், நோய் வந்துவிட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு விடுகிறார்கள். வரும் முன் காப்போம் என்ற அடிப்படையிலே பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தினந்தோறும் அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, யார் யார் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், இதற்கு என்னென்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற விவரத்தை உடனுக்குடன் எங்களுக்கு தெரிவித்துக் கொண்டு இருக்கின்றார். அரசைப் பொறுத்தவரைக்கும் வேகமாக, துரிதமாக இன்றைக்கு நோய் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x