Last Updated : 16 Mar, 2020 04:29 PM

 

Published : 16 Mar 2020 04:29 PM
Last Updated : 16 Mar 2020 04:29 PM

தவறிழைத்தால் போலீஸார் மீதும் கிரிமினல் வழக்கு: காவல்துறை அதிகாரிகளிடம் கிரண்பேடி கண்டிப்பு

முகக் கவசம் அணிந்தபடி ஆய்வு மேற்கொண்ட கிரண்பேடி.

புதுச்சேரி

தவறு செய்திருந்தால் போலீஸ் அதிகாரிகளாக இருந்தாலும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும், சட்டப்படி காவல்துறை புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை தேவை என்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி பெரியக்கடை காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட அம்பலத்தடையார் மடத்து வீதியிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்த இரண்டு ஜோடியினரிடம் இரண்டு போலீஸார் மிரட்டிப் பணம் பறித்ததோடு, அதில் ஒரு பெண்ணைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக செய்தி வெளியானது.

இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய காவல்துறை உயரதிகாரிகள், பெரியக்கடை காவலர் சதீஷ்குமார், ஐஆர்பிஎன் காவலர் சுரேஷ்குமார் ஆகிய இரண்டு பேரைப் பணியிடை நீக்கம் செய்தனர்.

இச்சூழலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தனது முகத்தில் மாஸ்க் அணிந்தபடி பெரியக்கடை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வினை இன்று (மார்ச் 16) மேற்கொண்டார். அந்த ஆய்வின்போது சீனியர் எஸ்.பி. ராகுல் அல்வால், எஸ்.பி. மாறன், பெரியக்கடை இன்ஸ்பெக்டர் செந்தில், சப் இன்ஸ்பெக்டர்கள் முத்து குமரன், முருகன் உள்ளிட்ட போலீஸார் இருந்தனர்.

அவர்களிடம் பேசிய ஆளுநர் கிரண்பேடி, "கடந்த சில நாட்களாக பெரியக்கடை காவல் நிலையம் தொடர்பான பல்வேறு புகார்கள் எனது தனிப்பட்ட மின்னஞ்சலுக்கும், கடிதம் மூலமாகவும் வந்ததால் இங்கு வந்துள்ளேன். சம்பந்தப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ளவே நான் ஆய்வுக்கு வந்துள்ளேன்" என்று விசாரணையைத் தொடங்கினார்.

அப்போது, "விடுதியில் ஆய்வுக்குச் சென்றோர் யார்? யாருடைய உத்தரவின் பேரில் அங்கு சென்றனர்? ஏன் ரெய்டின் போது பெண் காவலர்களை உடன் அழைத்துச் செல்லவில்லை. இந்த விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் அது நீதியல்ல. இந்த ஆய்வின் நோக்கம், உங்களின் பணியை மேம்படுத்திக்கொள்வதற்கான ஆலோசனையை வழங்குவதாகும். காவல் நிலையத்துக்கு வந்த புகார்கள், கடிதம் மூலம் வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க யார் களத்துக்குச் செல்கிறார்கள்?

பீட் ஆபிஸர்களின் பணி என்ன? நீதியை வழங்க வேண்டியதே காவல்துறையின் முதல் கடமை. தவறு செய்திருந்தால் போலீஸ் அதிகாரிகளாக இருந்தாலும் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். சட்டப்படி காவல்துறை புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

பின்னர் அங்கிருந்த போலீஸாரை அழைத்து தனியாக அரை மணிநேரம் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, ஐஆர்பிஎன் படைப் பிரிவுக்குச் சென்றார். அங்கும் ஆய்வு மேற்கொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x