

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை என கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிறையிலுள்ள யுவராஜ் பரபரப்பு ஆடியோவை வெளியிட்டுள்ளார்.
சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவராஜ் கைது செய்யப்பட்டார். இவர் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக சிறையில் இருந்தபடி பரபரப்பான ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை. சிபிஐ அதிகாரிகள் என்னை விசாரிக்காமல் அவசர அவசரமாக விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். என்னிடம் விசாரித்தால் விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக பல்வேறு ஆதாரங்களைத் தெரிவித்திருப்பேன். விஷ்ணுபிரியா தற்கொலைக்கு அப்போதைய நாமக்கல் எஸ்.பி.தான் காரணம். இந்த உண்மையை வெளியே சொல்லிவிடுவேன் என்பதால் என்னைக் கொல்வதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன" என ஆடியோவில் யுவராஜ் கூறியுள்ளார்.
டிஎஸ்பி விஷ்ணுபிரியா 18.9.2015-ல் திருச்செங்கோடு காவலர் குடியிருப்பில் உள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து, விஷ்ணுபிரியா தற்கொலைதான் செய்துள்ளார், அதற்கு யாருடைய தூண்டுதலும் காரணமாக இல்லை என்று கூறி வழக்கை முடிப்பதாகத் தெரிவித்தது.
இந்நிலையில் யுவராஜ் சிறையிலிருந்தபடி ஆடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ வெளியானது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர். சிறை தொலைபேசியில் இருந்து வெளியே உள்ள ஒருவருக்கு யுவராஜ் பேசியது பதிவு செய்யப்பட்டு வெளியிடப்பட்டதாகத் தெரிகிறது.
தவறவிடாதீர்!