குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்: விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

தீக்குளிக்க முயன்ற மகாலட்சுமி
தீக்குளிக்க முயன்ற மகாலட்சுமி
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 3 குழந்தைகளுடன் வந்த பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது மூவரை வென்றான் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தனது மகன் மற்றும் மகளுடன் இன்று (பிப்.17) காலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர், தன் உடலில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரோடு அதே பகுதியைச் சேர்ந்த சுப்புலட்சுமி மற்றும் பாண்டிச்செல்வி ஆகியோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைக் கண்ட போலீஸார் உடனடியாகச் சென்று அனைவரையும் மீட்டனர்.

இதுகுறித்து, மகாலட்சுமி கூறுகையில், "மூவரை வென்றான் கிராமத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு முருகானந்தம் என்பவர் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இதனால் அவர் ஆத்திரமடைந்து எங்கள் குடும்பத்தினரை தொடர்ந்து மிரட்டி வருகிறார். நாங்கள் முருகானந்தத்திற்கு வாக்களிக்காததால்தான் தோற்றதாகக் கூறி முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் எங்களுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து, சண்டையிட்டு வருகின்றனர்.

இதுபற்றி நத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றால், எங்களது புகாரை போலீஸார் ஏற்க மறுத்தனர். எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றேன்'' என்று தெரிவித்தார்.

இதையடுத்து சூலக்கரை போலீஸார் மகாலட்சுமி, அவரது குழந்தைகள் மற்றும் உடன் வந்த நபர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் நேரத்தில் குடும்பத்துடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தவறவிடாதீர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in