

மாநிலங்களவையில் இந்த ஆண்டு 68 இடங்கள் காலியாவதால், அதில் காங்கிரஸ் கட்சிக்குப் பல இடங்கள் குறைவதோடு, எதிர்க்கட்சிகளின் பலம் குறையக்கூடும். அதேசமயம் ஆளும் கட்சியான பாஜகவின் பலம் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்க அந்தக் கட்சி ஆர்வமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து பிரியங்கா காந்திக்கு எம்.பி. பதவி வழங்கப்படலாம் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு மாநிலங்களவையில் ஏப்ரல் மாதம் 51 இடங்களும், ஜூன் மாதம் 5 இடங்களும், ஜூலை மாதம் ஒரு இடமும், நவம்பர் மாதம் 11 இடங்களும் காலியாகின்றன. இதில் ஏப்ரல், ஜூன் மாதங்களில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மோதிலால் வோரா, மதுசூதன் மிஸ்த்ரி, குமார் செல்ஜா, திக்விஜய் சிங், ஹரிபிரசாத், ராஜீவ் கவுடா ஆகியோரின் பதவிக் காலம் முடிகிறது.
இதில் திக்விஜய் சிங், மோதிலால் வோரா, குமாரி செல்ஜா ஆகியோருக்கு மீண்டும் எம்.பி. பதவிக்கான வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. அதோடு, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜோதிர் ஆதித்யா சிந்தியா, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோருக்கு மாநிலங்களவை எம்.பி. வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
தற்போது காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருப்பதால், இந்த மாநிலங்களில் இருந்து சில இடங்கள் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து 3 இடங்களும், மத்தியப் பிரதேசத்தில் இருந்து 2 அல்லது 3 இடங்களும், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் இருந்து தலா ஒரு இடமும், சத்தீஸ்கரிலிருந்து 2 இடங்களும் கிடைக்கும். அதேசமயம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா,தெலங்கானா, மேகாலயா, அசாம் ஆகிய மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கான இடங்களை இழக்க நேரிடும்.
இந்த ஆண்டு 68 இடங்களுக்கான தேர்தல் முடிந்த பின் பார்க்கும்போது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பலம் குறைந்தும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சியின் பலம் மாநிலங்களவையில் சற்று அதிகரித்தும் இருக்கும்.
உத்தரப் பிரதேசத்தில் இருந்து பாஜகவுக்கு அதிகமான இடங்கள் மாநிலங்களவைக்கு இந்த முறை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் ராஜ் பப்பார், பூனியா ஆகியோருக்கு இந்த முறை இடம் கிடைப்பது கடினமாகும். பாஜகவுக்கு 10 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
மகாராஷ்டிராவிலும், தமிழகத்திலும் மொத்தம் 6 இடங்கள் காலியாகின்றன. இதில் மேற்கு வங்கம், பிஹாரில் 4 இடங்களும், குஜராத், கர்நாடகா, ஆந்திராவில் 3 இடங்களும் காலியாகின்றன. தற்போதுள்ள சூழலில் மாநிலங்களவையில் பாஜகவுக்குப் பெரும்பான்மை இல்லை. நட்புக் கட்சிகளான பிஜூ ஜனதா தளம், அதிமுக ஆகியவற்றின் துணையுடன் மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்றி வருகிறது.
245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பாஜகவுக்கு தற்போது 82 உறுப்பினர்களும், காங்கிரஸ் கட்சிக்கு 46 உறுப்பினர்களும் உள்ளனர். 12 பேர் நியமன உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது