

கோவிட்-19 காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு மருத்துவ நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சீனாவின் ஹுபெய் மாகாணம், வூஹானில் கடந்த டிசம்பர் மாதம் கோவிட்-19 காய்ச்சல் கண்டறியப்பட்டது. கடந்த சில மாதங்களில் ஹுபெய் மாகாணம் மட்டுமன்றி சீனா முழுவதும் இந்த காய்ச்சல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.
உயிரிழப்பு 1,665 ஆக உயர்வு
சீன அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், " கடந்த சனிக்கிழமை கோவிட் -19 காய்ச்சலால் 142 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,665 ஆக உயர்ந்துள்ளது. 2009 பேருக்கு காய்ச்சல் பரவியுள்ளது. இதன்மூலம் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68,500 ஆக அதிகரித்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்து ஜப்பானில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. அந்த நாட்டின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் நேற்று புதிதாக 70 பேருக்கு கோவிட் -19 காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கப்பலில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 355 ஆக உயர்ந்துள்ளது.
5 இந்தியர்களுக்கு பாதிப்பு
இந்த கப்பலில் தமிழர்கள் உட்பட 138 இந்தியர்கள் உள்ளனர். இதில் 3 இந்தியர்களுக்கு கோவிட் 19 காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அவர்களின் உடல் நலன் தேறி வருவதாக இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் புதிதாக 2 இந்தியர்களுக்கு காய்ச்சல் பரவியிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
சொகுசு கப்பல் பயணிகளையும் சேர்த்து ஜப்பானில் ஒட்டுமொத்தமாக 407 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு கப்பலில் சுமார் 400 அமெரிக்கர்கள் உள்ளனர். அனைவரையும் விமானம் மூலம் அழைத்துச் செல்ல அமெரிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்படும் அவர்கள் தனி முகாமில் தங்க வைக்கப்படுவார்கள். குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகே அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரில் 72, ஹாங்காங்கில் 57, தாய்லாந்தில் 34, தென்கொரியாவில் 29, மலேசியாவில் 22, தைவானில் 18, ஜெர்மனியில் 16, வியட்நாமில் 16, ஆஸ்திரேலியாவில் 15, அமெரிக்காவில் 15, பிரான்ஸில் 12 பேருக்கு கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு உள்ளது.
இந்தியா உதவி
மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில், சீனாவுக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, ட்விட்டரில் நேற்று வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:
இக்கட்டான சூழலில் தவிக்கும் சீன மக்களுக்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும். நல்லெண்ணம், நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு விரைவில் மருத்துவ நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும். கோவிட்-19 காய்ச்சலுக்கு எதிராக சீன அரசும் சீன மக்களும் உறுதியுடன் போராடி வருகின்றனர். அவர்களை பாராட்டுகிறேன். இந்த கொடிய காய்ச்சலில் இருந்து இந்தியர்களை காப்பாற்ற மத்திய அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
406 இந்தியருக்கு பாதிப்பில்லை
சீனாவின் வூஹான் பகுதியில் சிக்கித் தவித்த 406 இந்தியர்கள் அண்மையில் மீட்கப்பட்டனர். அவர்கள் டெல்லியில் உள்ள மத்திய படைகளின் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது பல்வேறு கட்ட ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களை வீடுகளுக்கு அனுப்பும் பணி இன்று தொடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 3 பேருக்கு கோவிட்-19 காய்ச்சல் தொற்றியிருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது. இதில் ஒரு மாணவி குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். மற்ற இருவரின் உடல்நிலையும் தேறிவிட்டது என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில் சீனாவில் இருந்து டெல்லி திரும்பிய 17 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மட்டும் டெல்லியில் உள்ள சாவ்லா மருத்துவமனையின் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் வந்த பிறகு என்ன வகையான காய்ச்சல் என்பது தெரியவரும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.