Published : 11 Mar 2014 11:14 am

Updated : 12 Mar 2014 08:52 am

 

Published : 11 Mar 2014 11:14 AM
Last Updated : 12 Mar 2014 08:52 AM

திமுக தேர்தல் அறிக்கை: கருணாநிதி வெளியிட்டார்; கல்விக் கடன் தள்ளுபடி, பறக்கும் கப்பல் திட்டம் உள்பட 100 வாக்குறுதிகள்

100

கருணாநிதி வெளியிட்ட திமுக தேர்தல் அறிக்கையில் 100 தலைப்பு களில் வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகள் இடம்பெற்றுள்ளன.

அதன் விவரம்:


மாநில அரசுகளை கலைக்கப் பயன்படுத்தப்படும் 356-வது சட்டப்பிரிவை நீக்க சட்டத்திருத்தம் கொண்டுவருதல், பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பதுடன் மதவெறியை முறியடிப்பது, பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது, தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு போன்றவற்றுக்கு திமுக பாடுபடும்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு, ஆதரவற்ற பெண்களின் குழந்தைகளுக்கு கல்லூரி வரை இலவசப் படிப்பு, பெண்களுக்கு மத்தியில் 30 சதவீத இட ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீட்டுக்காக பாடுபடுவது, அகில இந்திய அளவில் சுயமரியாதை திருமணச் சட்டம், மிகப் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு ஆகியவற்றுக்காக மத்திய அரசை வலியுறுத்துவோம்.

நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, நாடெங்கும் பெரியார் சமத்துவபுரங்கள் அமைத்தல், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி நியமனத்தில் முன்னுரிமை, காஞ்சிபுரத்தில் கைத்தறிப் பட்டு நெசவுத் தொழில் மையம் உருவாக்குதல், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் கண்காணிப்பு அமைப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

சேது சமுத்திர திட்டப் பணிகளை மீண்டும் தொடங்குதல், நெல்லை மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் விண்கலன் ஏவுதளம், மகேந்திரகிரியில் திரவ உந்துவிசை தொழில்நுட்ப மையம் அமைத்தல் போன்றவற்றுக்கு திமுக பாடுபடும்.

கச்சத்தீவை மீட்பது, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண ஐ.நா. மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்துவது, தமிழகத்தில் இருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளை நிரந்தரமாக இந்திய குடிமக்களாக அறிவித்தல், இலங்கை, இந்திய மீனவர்கள் பிரச்சினை தீர, இரு நாட்டு கடற்கரையில் சிக்கல் தீர்வு மையம், மீனவர்களுக்கு தனி அமைச்சகம், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல் ஆகியவற்றை திமுக வலியுறுத்தும்.

மத்தியிலும் தமிழ் ஆட்சிமொழி, உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குதல், நதிகள் இணைப்பு, தேசிய மின்வழித்தடம் அமைத்தல், தூக்கு தண்டனை அடியோடு ரத்து, புதுவைக்கு முழு மாநில அந்தஸ்து, கல்விக்கடன்கள் தள்ளுபடி, மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டப்பணிகளை முடித்தல், ஆண்களுக்கு 6 லட்சம், பெண்களுக்கு 7.20 லட்சம் ரூபாய் வரை தனி நபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்துதல், நாடு முழுவதும் 10 லட்சம் மக்கள் நலப் பணியாளர்கள் நியமனம், 10 லட்சம் சாலைப் பணியாளருக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு ஆகியவற்றை நிறைவேற்றுவோம்.

காவிரிப் படுகையில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் கைவிடுதல், சிறு விவசாயக் கடன் ரத்து, நெல், கரும்பு, தேங்காய், பச்சைத் தேயிலைக்கும் குறைந்தபட்ச விலையை உயர்த்துதல், பெட்ரோலியப் பொருட்களுக்கு நியாயமான விலை, அனைத்து மாநகராட்சிகளிலும் விரைவு ரயில் திட்டம், கிழக்குக் கடற்கரைப் பகுதியில் நீர்வழிப் போக்குவரத்து (பறக்கும் கப்பல் திட்டம்) ஆகிய திட்டங்கள் நிறைவேற்ற பாடுபடுவோம்.

புதிய பாம்பன் பாலம் கட்டுதல், காவிரி மேலாண் வாரியம் அமைத்தல், வீடு இல்லாதவர்களுக்கு காப்பிடங்கள் அமைத்தல் போன்றவற்றுக்காக திமுக பாடுபடும்.

இவ்வாறு தேர்தல் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதிதிமுக தேர்தல் அறிக்கைதேர்தல் அறிக்கைமக்களவை தேர்தல்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x