Published : 11 Feb 2020 01:13 PM
Last Updated : 11 Feb 2020 01:13 PM

இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சட்டப் பாதுகாப்பினை மேற்கொள்க: மார்க்சிஸ்ட் தீர்மானம்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாத்திட உரிய சட்டப் பாதுகாப்பினை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் பிப்.10,11 ஆகிய தேதிகளில் சென்னையில், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், பி.சம்பத், உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டாம் நாளான இன்று நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தீர்மானம்:1

தமிழகத்திற்கான திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்

மாநிலங்களில் வருவாய்க்கான வாய்ப்புகள் அனைத்தையும் மத்திய அரசு கொஞ்சம், கொஞ்சமாக கபளீகரம் செய்துள்ள நிலையில் பல மாநிலங்கள் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. தமிழக அரசும் ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் சுமையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய பல்வேறு நிதிவகைகளை தராமல் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்கான ரூ.4,073 கோடி, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி உதவிக்கான மத்திய அரசின் பங்குத் தொகை நூற்றுக்கணக்கான கோடிகள், மாநிலத்தில் செய்து முடிக்கப்பட்ட கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி பலநூறு கோடிகளை மத்திய அரசு இதுவரை அளிக்காமல் காலம் தாழ்த்தி தமிழக மக்களை வஞ்சித்து வருகிறது.

இதேபோன்று மாநிலங்களின் பங்காக இதுவரை வரி வருவாயில் மாநிலங்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த 42 சதவிகிதம், 41 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவெல்லாம் தமிழக அரசை மேலும் கடுமையான நிதிச்சுமையில் தள்ளுவதோடு, ஒட்டுமொத்தச் சுமையையும் தமிழக மக்கள் மீது திணிப்பதாகும்.

இந்த பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.10,000 மட்டும் ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே அடிக்கல் நாட்டு விழா மேற்கொள்ளப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் தொடங்கப்படாமலே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுவெல்லாம் மத்திய அரசு தமிழக மக்களை ஓரவஞ்சனையோடு நடத்துவதாகும். மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் போக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

தமிழகத்திற்கான நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டுமென்றும், தமிழகத் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.

கடுமையான நெருக்கடி இருந்த போதும் மத்திய அரசு மாநிலத்திற்கு உரிய நிதிப்பங்கை அளிக்காத போதும் மாநிலத்தை ஆளும் அதிமுக அரசாங்கம் இதுகுறித்து மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தவோ, விமர்சிக்கவோ செய்யவில்லை. தனது சுயநலத்திற்காக தமிழக மக்கள் வஞ்சிக்கப்பட்டாலும் அமைதி காக்கும் மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

எனவே, தமிழக அரசும் மத்திய அரசு தர வேண்டிய நிதிகளை பெறுவதற்கு உரிய அழுத்தங்களை அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தமிழக அரசை வற்புறுத்துவதோடு, தமிழக மக்களும் தமிழக நலன் காத்திட குரலெழுப்பிட முன்வர வேண்டுகிறோம்.

தீர்மானம்: 2

இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாத்திட உரிய சட்டப் பாதுகாப்பினை மேற்கொள்க

உத்தரகாண்ட் பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் பதவி உயர்வுகள் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு மீது அளித்துள்ள தீர்ப்பு ஓபிசி, எஸ்சி/எஸ்டி மக்களின் உரிமைகளுக்கு விரோதமானதும், அரசியல் சாசனத்திற்கு எதிரானதும் ஆகும். உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

இட ஒதுக்கீடு குறித்த நீண்ட நெடிய விவாதங்களுக்குப் பின்னரே அரசியல் அமைப்பு சாசனம் அதை ஏற்றுக் கொண்டது என்பதும், இந்திய நாட்டின் முதல் அரசியல் சாசனத் திருத்தமும் இட ஒதுக்கீடு குறித்ததாக அமைந்தது என்பதும் வரலாறு. காலங்காலமாக சாதியின் பெயரால் வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு ஓர் நிவாரணியாக அமைந்தது என்பது உண்மை. இது நாடு முழுமைக்கும் அமலாக வேண்டிய சட்ட நியதியாகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் அரசியல் சட்டப் பிரிவு 16(4) மற்றும் 16 (4-அ)ல் குறிப்பிடப்பட்டுள்ள இட ஒதுக்கீடு, ஓபிசி, பட்டியல் சாதி, பழங்குடிப் பிரிவினருக்கான அடிப்படை உரிமையாக கருதப்பட முடியாது என விளக்கம் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது அதிர்ச்சி தருகிறது. இந்த விளக்கம் சமூக நீதிக் கோட்பாட்டை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இத்தீர்ப்பு நாட்டில் இன்றும் நிலவும் சாதிய பாரபட்சங்களை, கல்வி, வேலை வாய்ப்புகளில் ஓபிசி, பட்டியல் சாதி, பழங்குடி பிரிவினருக்கு உரிய பிரதிநிதித்துவம் இன்மையைக் கணக்கில் கொள்ளத் தவறியிருக்கிறது. இந்நிலையில் மத்திய அரசு விரைந்து உரிய சட்ட வழிமுறைகளை மேற்கொண்டு இத்தீர்ப்பில் நிகழ்ந்துள்ள அநீதியைச் சரி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு கோருகிறது.

இட ஒதுக்கீட்டு வரலாற்றில் தமிழகத்திற்கு முக்கிய இடம் உண்டு. அத்தகைய பெருமையைப் பாதுகாக்கிற வகையில் தமிழக அரசு இப்பிரச்சினையில் உரிய சட்ட வழிமுறைகளை உடனே மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

இதற்கான வலுமிக்க குரலை எழுப்புவதோடு, ஒத்த கருத்து கொண்டோரை இணைத்து இட ஒதுக்கீட்டு உரிமையை உறுதி செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x