Published : 08 Feb 2020 10:12 AM
Last Updated : 08 Feb 2020 10:12 AM

கைது செய்யப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுதலை செய்க; ஜனநாயகக் காற்றை சுவாசிக்க இடமளியுங்கள்: ஸ்டாலின்

காஷ்மீர் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.8) வெளியிட்ட அறிக்கையில், "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோரை அடக்குமுறை சட்டமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருப்பதற்கு திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து எவ்வித குற்றச்சாட்டுகளும் இல்லாமல், எந்தக் கேள்வியும் கேட்காமல் முன்னாள் முதல்வர்களையும், முக்கிய அரசியல் தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பது, ஜனநாயகத்திற்கு கைவிலங்கும் கால்விலங்கும் போடும் கொடுமையான நிகழ்வு ஆகும்.

சர்வாதிகார மனப்பான்மையுடன், அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்து, காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து, அங்குள்ள சட்டப்பேரவையைக் கூட மதிக்காமல், மக்களையும் மதிக்காமல், ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்தது மத்திய பாஜக அரசு. இந்தியாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கையுள்ள அரசியல் தலைவர்களையும், முன்னாள் முதல்வர்களையும் சிறையில் தொடர்ந்து அடைத்து வைத்திருப்பது, தனி மனித சுதந்திரத்திற்கும், மனித உரிமைகளுக்கும் எதிரானது. ஜனநாயகத்தின் மீதும், அரசியல் சட்டத்தின் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எள்ளி நகையாடுவது போல் மத்திய பாஜக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது மிகவும் கவலையளிக்கிறது.

இது போன்ற மிருகத்தனமான சட்டங்கள், எந்த மாநிலத்திலும் பயன்படுத்தப்படலாம், எந்த அரசியல்வாதி மீதும் போடப்படலாம் என்பது நாட்டுக்கும், மத்திய, மாநில உறவுகளுக்கும் ஏற்றதுமல்ல. தேர்தல் வெற்றியினால் பெரும்பான்மை பலம் கிடைத்து விட்டது என்பதற்காக, சட்டங்களை வளைத்து, கூட்டாட்சித் தத்துவத்தை பாஜக கேலிக்கூத்தாக்குகிறது.

அனைவருக்கும் பொதுவான மத்திய அரசு இயந்திரத்தையும், நாட்டின் சட்டங்களையும் பாஜக தன் இச்சைப்படி பயன்படுத்துவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, காஷ்மீரத்து சிங்கம் பரூக் அப்துல்லா போன்ற தலைவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பது, அடிப்படை உரிமைகளின் மீதும், கருத்துச் சுதந்திரத்தின் மீதும் செலுத்தப்படும் கொடூரமான அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும், அங்கு அரசியல் கட்சிகளுக்கு உரிய சுதந்திரம் கிடைக்க வேண்டும், ஜனநாயக நடைமுறைகள் மீண்டும் புழக்கத்திற்கு வர வேண்டும் என்பதில் யாருக்கும் இரு வேறு கருத்துகள் இருந்திட வாய்ப்பே இல்லை.

ஆனால், தேசபக்திக்கு நாங்கள் மட்டுமே நிரந்தரக் குத்தகைதாரர்கள். மற்றவர்கள் எல்லாம் எதிரிகள் என்பது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி- காஷ்மீரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட முன்னாள் முதல்வர்களையும், ஏன் பாஜகவே கூட்டணி வைத்து வெற்றி பெற்று ஆட்சியில் பங்கேற்ற தலைவர்களையும் கைது செய்வது பாஜகவின் பச்சை சுயநலமே தவிர, நியாயமான மத்திய அரசின் நேர்மையான நடவடிக்கையாகத் தெரியவில்லை.

காஷ்மீரை தொடர்ந்து பதற்றமுள்ள பகுதியாகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய பாஜக அரசு ஆசைப்படுகிறதோ என்ற சந்தேகம் இப்போது மக்கள் மனதில் எழுகிறது.

ஆகவே ஆறு மாத சிறைக்காவல் முடிவடைந்த நிலையில், திடீரென்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள மூத்த தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும்; அடைக்கப்பட்டிருக்கும் ஜனநாயகத்தின் கதவுகளைத் திறந்துவிட வேண்டும் என்றும்; பிரதமர் நரேந்திரமோடியைக் கேட்டுக் கொள்கிறேன்.

பிரதமர் இந்திய நாட்டின் பிரதமர், எல்லோருக்கும் பிரதமர், அவர் ஏதோ பாஜகவுக்காக மட்டுமே பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்ட பிரதமர் அல்ல என்பதை நினைவூட்டுவது நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுகவின் கடமை என்று கருதுகிறேன்.

ஆகவே இனியும் காலதாமதம் செய்யாமல், புதிய புதிய காரணங்களை செயற்கையாகக் கண்டுபிடித்து காஷ்மீர் தலைவர்களை சிறையில் வைத்திருப்பதை கைவிடுமாறும், காஷ்மீரில் ஜனநாயகக் காற்றை அனைத்துத் தரப்பு மக்களும், எந்தவிதத் தடையுமின்றிச் சுவாசிக்க இடமளிக்குமாறும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x