

சீனாவில் சிக்கியுள்ள ஆந்திர மணப்பெண் ஒருவர் தனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் தன்னை உடனே மீட்டுச் செல்ல வேண்டும் என்றும் மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பண்டி ஆத்மகூரு மண்டலம், ஈர்னபாடு கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி. இவர் சித்தூர் மாவட்டம், ஸ்ரீசிட்டியில் உள்ள டிசிஎல் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். பயிற்சிக்காக சீனாவில் உள்ள வூஹானுக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு அங்கிருந்து இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்தது. இதில் பலர் தாயகம் திரும்பி அவரவர் ஊர்களில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே ஜோதி சில நாட்களுக்கு முன் செல்போன் மூலம் வீடியோ பதிவு ஒன்றை அனுப்பினார். இதில் தனக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் தன்னை உடனே மீட்டுச் செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து 2-வதாக சென்ற இந்திய விமானத்தில் அவர் புறப்படத் தயாரானபோது, காய்ச்சல் அதிகமாக இருந்ததால் அவரை இந்தியாவுக்கு அனுப்ப சீன அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜோதி நேற்று மீண்டும் ஒரு வீடியோ பதிவை செல்போன் மூலம் அனுப்பியுள்ளார். அதில் தனக்கு வெறும் காய்ச்சல் மட்டுமே உள்ளதாகவும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் ஜோதி கூறியுள்ளார். வரும் 19-ம் தேதிக்குள் தனது விசா காலமும் முடிவடைவதால் தன்னை உடனடியாக சீனாவிலிருந்து மீட்டுச் செல்ல வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜோதிக்கு ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் 18-ம் தேதி திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் சீனாவில் சிக்கியுள்ளார்.