Published : 30 Dec 2019 07:29 AM
Last Updated : 30 Dec 2019 07:29 AM

பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் பாணியில் வெற்றிக்கான வியூகங்களை வகுக்க மக்கள் நீதி மய்யத்தில் புதிய குழு

சென்னை

மு.யுவராஜ்

பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் பாணியில் தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை வகுக்க மக்கள் நீதி மய்யம் கட்சியில் புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற, அரசியல் கட்சிகளுக்கு வியூகங்கள் அமைத்துக் கொடுப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் பிரசாந்த் கிஷோர். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் மோடிக்கு இவர் ஆலோசனைகள் வழங்கினார். அந்த தேர்தலில் மோடி பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தார்.

கடந்த ஏப்ரலில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பணியாற்ற பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும், வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலிலும் அதன்பிறகு நடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்களிலும் மக்கள் நீதிமய்யம் போட்டியிடவில்லை. 2021-ம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காக வைத்து பணியாற்றும் வகையில், பிரசாந்த் கிஷோர் வழங்கிய அறிவுறுத்தலின் அடிப்படையில்தான் மக்கள் நீதி மய்யம் தேர்தலை புறக்கணித்து வந்ததாக தகவல்கள் வெளியானது. அதே நேரத்தில், கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

பிரசாந்த் கிஷோருடனான மக்கள் நீதி மய்யத்தின் ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. ஒப்பந்தத்தை நீட்டிக்க இருதரப்பும் விரும்பவில்லை. இதையடுத்து, பிரசாந்த் கிஷோர் திமுக வுக்காக பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டு பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோரின் பாணியை பின்பற்றி, வியூகங்களை வகுத்துப் பணியாற்ற புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

பிரசாந்த் கிஷோருடனான ஒப்பந்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வியூகங்களை வகுக்க புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், 70 பேர் இடம் பெற்றுள்ளனர். அரசியல், சமூகம் சார்ந்த அனைத்துவிதமான புள்ளி விவரங்களை சேகரிப்பது, அவற்றின் அடிப்படையில் பணியாற்ற நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்குவது, தமிழகம் முழுவதும் கட்சிக்கு பலமான தொகுதி எது, பலவீனமான தொகுதி எது என்பதை கண்டறிவது, தேர்தல் நேரங்களில் மக்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ற வகையில் பிரச்சாரங்களை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை இந்தக் குழுவினர் மேற்கொள்வர்.

கள நிலவரங்களுக்கு ஏற்றபடி வியூகங்களை வகுப்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டே புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x