Published : 30 Dec 2019 07:16 AM
Last Updated : 30 Dec 2019 07:16 AM

தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சியில் மக்களை கவரும் தெற்கு ரயில்வே அரங்கம்

சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தெற்கு ரயில்வேயின் அரங்கம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சென்னை தீவுத்திடலில் ஆண்டுதோறும் இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான பொருட்காட்சியில் தமிழக அரசின் அனைத்து துறைகளின் நலத் திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் பொதுமக்கள் அறிந்திடும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

வரும் பிப்ரவரி 29-ம் தேதி வரை இந்த பொருட்காட்சி நடக்கவுள்ளது. அலுவலக நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் இந்த பொருட்காட்சி திறந்திருக்கும்.

இந்த பொருட்காட்சியில் மத்திய அரசு நிறுவனங்களும் அரங்குகளை அமைத்துள்ளன. இதில் வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமல்லாமல், ரயில்வே துறை குறித்த அடிப்படைத் தகவல்களை எடுத்துரைக்கும் வகையில் தெற்கு ரயில்வேயின் அரங்கு அமைந்துள்ளது. பாரம்பரிய ரயில் இன்ஜின்கள், பெட்டிகளின் மாதிரிகள், ரயில் பெட்டியில் பயோ கழிவறை தொழில்நுட்பம், பழைய இரும்பு பொருட்களை கொண்டு செய்யப்பட்ட கலை உருவங்கள், பாம்பன் ரயில்வே மேம்பாலத்தின் மாதிரி மற்றும் செயல்படும் தொழில்நுட்பமுறை மாதிரிகள், ரயில்வேயின் வரலாறு மற்றும் வளர்ச்சியை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.

இதேபோல, மரக்கட்டையால் செய்யப்பட்ட ரயில் இன்ஜினும் இடம்பெற்றுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதைப் பார்த்து மகிழ்கின்றனர்.

தெற்கு ரயில்வே அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புகளை தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் ஜான் தாமஸ் மற்றும் உயர் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர். இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி, ரயில்வே சார்ந்த வரலாறு, வளர்ச்சி மற்றும் அடிப்படை தகவல்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இங்கு அரங்கு அமைத்துள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தினமும் 500-க்கும் மேற்பட்டோர் இந்த அரங்கை பார்வையிட்டு செல்கின்றனர். கடந்த ஆண்டில் நடைபெற்ற இந்த கண்காட்சியை சுமார் 9 லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x