Published : 28 Dec 2019 12:37 PM
Last Updated : 28 Dec 2019 12:37 PM

மத்திய அரசின் தரவரிசைப் பட்டியலில் தமிழகத்துக்கு முதலிடம்: யாருடைய சிபாரிசும் இல்லை; ஸ்டாலினுக்குக் குறை சொல்வதே வழக்கம்: முதல்வர் பழனிசாமி

ஸ்டாலினுக்கு எப்போதும் அதிமுக அரசை குறைசொல்வதுதான் வழக்கம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் விமான நிலையத்தில் இன்று (டிச.28) முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதிமுக அரசுக்கு நல்லாட்சி சான்றிதழை மத்திய அரசு செயற்கையாக அளித்திருக்கிறது என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளாரே?

மத்திய அரசின் அங்கீகாரம், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியடையும் அளவுக்கு இந்த அறிவிப்பு இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குக் கிடைத்த வெற்றி என கருதுகிறேன். அதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, அதிகாரிகள், அனைத்துத் துறைகளிலும் கவனம் செலுத்தி செயல்பட்டதால், தமிழகம் இந்தியாவிலேயே சிறந்த ஆளுமை திறமை மிக்க மாநிலம் என்கிற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதற்காக பாடுபட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், அரசு ஊழியர்களுக்கு நன்றி.

ஸ்டாலினுக்கு எப்போதும் அதிமுக அரசை குறைசொல்வதுதான் வழக்கம். இது மத்திய அரசு 50 வகையான காரணிகளைக் கொண்டு இந்தியா முழுவதும் ஆய்வு செய்து, அதில் ஒவ்வொரு துறைக்கும் ஒரு மதிப்பெண்ணைக் கொடுத்து, அந்த மதிப்பெண்களை ஒன்றாக சேர்த்து அதில் 5.62 புள்ளிகளை தமிழகம் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இதில் யாருடைய சிபாரிசும் கிடையாது.

அதேபோன்று, யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரிக்குக் கொடுத்திருக்கின்றனர். அது காங்கிரஸ் ஆளும் யூனியன் பிரதேசம். பாஜக ஆளும் மாநிலங்கள் என இல்லாமல், வேறு கட்சி ஆட்சி செய்யும் மாநிலமான தமிழகத்தில், பல்வேறு காரணிகள் ஆய்வு செய்யப்பட்டு, தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது பெருமைக்குரிய விஷயம்.

பிரதமர் உரையை கேட்க பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் பள்ளிகளுக்கு மாணவர்கள் வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதே?

இதற்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கம் கொடுத்து விட்டது. வீடுகளில் தொலைக்காட்சி இல்லாதவர்கள் விருப்பப்பட்டால், பள்ளிகளில் வந்து பார்க்கலாம் என்றுதான் கல்வித்துறை கூறியிருக்கிறது. இது கட்டாயம் கிடையாது. பல குடும்பங்களில் தொலைக்காட்சி இல்லை. அப்படிப்பட்ட மாணவர்கள் பிரதமரின் உரையைக் கேட்க வேண்டும் என விருப்பப்பட்டால் பள்ளிக்கு வந்து கேட்கலாம்.

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பது குறித்து திமுக வழக்கு தொடுத்துள்ளதே?

நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்திருக்கிறது. அதற்கு தேர்தல் ஆணையம் தான் பதில் சொல்ல வேண்டும். இது தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டிய முடிவு. மாநில அரசு அல்ல. தேர்தல் நடந்துவிட்டது. அதில் யாரும் தலையிட முடியாது என்பதுதான் நீதி. பல்வேறு மாநிலங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தனியாகவும், நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தனியாகவும் தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது. திமுகவினர் அவர்களின் மனம் போல் வழக்குத் தொடுக்கின்றனர். இந்த வழக்கில் உள்நோக்கம் இல்லாமல் இல்லை. நேற்று நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாக நடைபெற்றுள்ளது. யாருடைய தலையீடும் இல்லை. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்கள் தான் தேர்ந்தெடுப்பர். இதில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. இது மறைமுகத் தேர்தல்.

ஆங்காங்கே வன்முறைகள் நடைபெற்றிருக்கிறதே?

ஆளும்கட்சி அத்துமீறல் என திமுக தான் சொல்லும். இந்த தேர்தல் கட்சி சார்பாக நடைபெறவில்லை. சுயேட்சையாகத்தான் எல்லோரும் போட்டியிட்டிருக்கிண்றனர்.

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம்.

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

தமிழ்நாட்டில் தான் மருத்துவப் படிப்பின் இட ஒதுக்கீடு அதிகம். 350 மருத்துவ இடங்களை இந்தாண்டு அதிகரித்துள்ளோம், ஒரே சமயத்தில் 9 அரசு மருத்துவக் கக்லுரிகள் அமைக்க அனுமதி வாங்கி சாதனை படைத்துள்ளோம். அதில் 6 மருத்துவக் கல்லூரிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x