Published : 28 Dec 2019 08:51 AM
Last Updated : 28 Dec 2019 08:51 AM

தமிழக பட்ஜெட் குறித்த இடைக்கால ஆய்வுக்கூட்டம்: அதிகாரிகளுடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆலோசனை

தமிழக பட்ஜெட் குறித்த இடைக்கால ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலர் க.சண்முகம், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலர் ச.கிருஷ்ணன் மற்றும் அனைத்து துறைகளின் செயலர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை

தமிழகத்தில் 2019-20-ம் நிதியாண்டு நிதிநிலை அறிக்கை குறித்த இடைக்கால ஆய்வுக் கூட்டம் மற்றும் 2020-21-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையின் அடுத்த 2020-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் வரும் ஜன.6-ம்தேதி தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, 2020-21-ம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.

இந்நிலையில், சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அப்போது, தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள ரூ.10 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தி னார்.

நடப்பு ஆண்டுக்கான நிதிநிலைஅறிக்கையை சட்டப்பேரவையில் கடந்த பிப்.8-ம் தேதி துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன்பின், ஜூன் - ஜூலையில் துறைதோறும் மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று, நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் ஒதுக்கிய நிதி குறித்த இடைக்கால ஆய்வுக்கூட்டம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

தலைமைச் செயலர் கே.சண்முகம், நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறைகளின் செயலர்களான ஹன்ஸ்ராஜ் வர்மா (ஊரக வளர்ச்சி), எஸ்.கே.பிரபாகர் (உள்துறை), மகேசன் காசிராஜன் (செய்தி), ககன்தீப்சிங் பேடி (வேளாண்மை), தீரஜ்குமார் (விளையாட்டு), பிரதீப் யாதவ் (பள்ளிக்கல்வி), மங்கத்ராம் சர்மா(உயர்கல்வி), கோபால் (கால்நடை, பால், மீன்வளம்), ஹர்மந்தர்சிங் (நகராட்சி நிர்வாகம்), அதுல்யமிஸ்ரா (வருவாய்), தயானந்த் கட்டாரியா (உணவு, கூட்டுறவு), செந்தில்குமார் (பொது), பாலச்சந்திரன் (பதிவு), ஷம்பு கல்லோலிகர் (வனம்), மணிவாசன் (பொதுப்பணி), பீலா ராஜேஷ் (சுகாதாரம்), குமார் ஜெயந்த் (கைத்தறி மற்றும் துணிநூல்), நசிமுத்தீன் (தொழிலாளர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், ஒவ்வொரு துறைக்கும் கடந்த நிதிநிலை அறிக்கையின்போது ஒதுக்கப்பட்ட நிதி, அவற்றில் திட்டங்களுக்கான செலவு உள்ளிட்டவற்றை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார்.

அத்துடன், மத்திய அரசிடம் இருந்து ஆதிதிராவிடர் நலத்துறை, பள்ளிக்கல்வித் துறை, வணிகவரித் துறை உள்ளிட்ட துறைகளுக்கு வரவேண்டிய நிதியை தொடர்ந்து கேட்டுப் பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதுதவிர, வரும் 2020-21-ம்ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் துறைகளுக்கு தேவையான திட்டங்கள், நிதி தொடர்பாகவும் ஆலோசித்ததாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x