Published : 25 Dec 2019 05:23 PM
Last Updated : 25 Dec 2019 05:23 PM

உள்ளாட்சித் தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பிரச்சாரம் ஓய்வு

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்டப் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மத்திய அரசு திட்ட நிதிகள் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் என 10 மாவட்டங்களைத் தவிர்த்து, 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது தொடர்பாக மறு அறிவிப்பை கடந்த 7-ம் தேதி மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்தது. 27 மாவட்டங்களில் உள்ள 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள், 9,624 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 91,975 பதவிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் 1 கோடியே 30 லட்சத்து 43,528 பெண்கள், 1 கோடியே 28 லட்சத்து 25,778 ஆண்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த 1,635 பேர் என மொத்தம் 2 கோடியே 58 லட்சத்து 70,941 பேர் வாக்களிக்க உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஐஏஎஸ் அந்தஸ்தில் உள்ள அதிகாரி, தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு டிச.27-ம் தேதியும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு 30-ம் தேதியும் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து கட்சி வேட்பாளர்களும் சுயேட்சைகளும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். விதிகளின்படி, இன்று (25-ம் தேதி) மாலை 5 மணிக்கு முதல்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்தது.

அதேபோல 30-ம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் 28-ம் தேதி முடிவடைய உள்ளது. இந்நிலையில் 48 மணி நேரத்துக்கு முன்னதாகவே வெளிநபர்கள் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x