Published : 06 Nov 2019 10:24 AM
Last Updated : 06 Nov 2019 10:24 AM

திருவள்ளுவர் சிலை அவமதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்: சிலைக்கு பாலாபிஷேகம் செய்த பாஜகவினர்

தஞ்சாவூர்

தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திராவிடர் கழகத்தினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜகவினர் திருவள்ளுவரின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பு திராவிடர் கழகம் சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அமர்சிங் தலைமை வகித்தார். இதில், திரளானோர் கலந்துகொண்டு, திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல, நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹுமாயூன் தலைமை வகித்தார். திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வேண்டும், திருவள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசக்கூடாது எனக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கரந்தையில் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலைக்கு பாலாபிஷேகம்

பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர். பின்னர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவள்ளுவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றுள்ளது. திருக்குறளை உலக நாடுகள் அனைத்தும் அறியச் செய்யும் வகையில் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். இதைப் பிடிக்காத சிலர் பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் திருவள்ளுவர் சிலையை அவமதித்துள்ளனர். திருவள்ளுவரின் புகழை உலக அளவில் எடுத்து செல்லக்கூடிய பாஜக ஏன் அவரை அவமானப்படுத்த வேண்டும்.

திருவள்ளுவராக இருந்தாலும் சரி, திருவள்ளுவர் சார்ந்த சமுதாயமாக இருந்தாலும் சரி அவர்கள் தீவிரமான இந்துக்கள்தான். திருக்குறளின் புகழை கெடுக்கக் கூடிய வகையில் செயல்படுவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x