Published : 15 Jul 2015 08:22 AM
Last Updated : 15 Jul 2015 08:22 AM

அமைச்சர் டி.பி.பூனாட்சி மீது நில அபகரிப்பு புகார்: சொந்த தம்பியே கொடுத்ததால் பரபரப்பு

தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் டி.பி.பூனாட்சி மீது அவரது சொந்த தம்பியே ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நில அபகரிப்பு புகார் அளித்தார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் டி.பி.தங்கராசு, டி.பி.நடராசு, டி.பி.பூனாட்சி, டி.பி.கணேசன். சகோதரர்களான இவர்களில் டி.பி.பூனாட்சி, தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக உள்ளார்.

இந்த நிலையில், தந்தை பெயரில் இருந்த 1.28 ஏக்கர் நிலத்தை சகோதரர்களான தங்களுக்கு பங்கு கொடுக்காமல், அமைச்சர் டி.பி.பூனாட்சி மோசடி செய்து தன்னிச்சையாக அபகரித்து விட்டதாக டி.பி.கணேசன் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று புகார் கொடுத்தார்.

முன்னதாக செய்தியாளர் களிடம் டி.பி.கணேசன் கூறிய தாவது: என் கடைசி அண்ணன் அமைச்சர் டி.பி.பூனாட்சி, அடமானத்தில் இருந்த நிலப் பத்திரத்தை மீட்க வேண்டும் என்று கூறி, கையெழுத்து வாங்கி, மோசடியாக தனது பெயருக்கு நிலத்தை மாற்றிக் கொண்டுவிட்டார். அவரது பெயரில் மின் இணைப்பை மாற்று வதற்காக மனு செய்தபோதுதான் இது எனக்குத் தெரிய வந்தது.

நில அபகரிப்பு குறித்து கேட்டதற்கு அமைச்சர் டி.பி.பூனாட்சி உரிய பதிலை அளிக்கவில்லை. மேலும், என் பக்கத்து வீட்டில் வசிக்கும் துரைசாமி என்பவரைத் தூண்டிவிட்டு, என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினார். போலீஸில் புகார் அளித்தபோது, நடவடிக்கை எடுக்காதபடி அமைச்சர் டி.பி.பூனாட்சி தடுத்துவிட்டார். என் மீதான தாக்குதலுக்கும் அமைச்சர் டி.பி.பூனாட்சிக்கும் தொடர்பு உள்ளது. எங்கள் குடும்ப பொதுச் சொத்தை அமைச்சர் டி.பி.பூனாட்சிக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்த நெய்வேலி விஏஓ மற்றும் அப்போதைய முசிறி வட்டாட்சியர் ஆகியோர் மீதும், நிலத்தை எங்களுக்குத் தெரியாமல் மோசடியாக அபகரித்துக் கொண்ட அமைச்சர் டி.பி.பூனாட்சி மீதும் மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக முசிறி கோட்டாட்சியரிடமும் புகார் அளித்துள்ளேன்.

உயிருக்கு அச்சறுத்தல் இருப்ப தாலேயே திருச்சி ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்துள்ளேன். இனியும் நடவடிக்கை எடுக்க வில்லையெனில், தமிழக முதல்வருக்கு புகார் மனுவை அனுப்புவேன் என்றார்.

சிவபதி எம்எல்ஏ தூண்டுதலா?

டி.பி.கணேசன், ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவது குறித்து தகவல் அறிந்த அமைச்சர் பூனாட்சியின் அண்ணன்கள் டி.பி.தங்கராசு, டி.பி.நடராசு ஆகிய இருவரும், அவர் வருவதற்கு முன்னதாகவே ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்துவிட்டனர்.

இதுகுறித்து அவர்கள் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: அமைச்சர் டி.பி.பூனாட்சியின் பெயரை, புகழை கெடுக்கும் நோக்கிலேயே டி.பி.கணேசன் நில அபகரிப்பு புகார் கூறுகிறார். எங்கள் தந்தையே அந்த நிலத்தை அமைச்சர் டி.பி.பூனாட்சி பெயருக்கு எழுதி கொடுத்தார். பிரச்சினை எழுந்ததால் அந்த நிலத்தை எங்கள் 4 பேருக்கும் சம அளவில் பங்கிட்டு பட்டா பெற விண்ணப்பித்துள்ளோம். இந்த பிரச்சினை எழுவதற்கு எம்எல்ஏ சிவபதிதான் காரணம். அவர்தான் எங்கள் தம்பி கணே சனை அமைச்சருக்கு எதிராகத் தூண்டிவிட்டுள்ளார் என்றனர்.

இதுகுறித்து சிவபதி எம்எல்ஏவை நாம் செல்போனில் தொடர்புகொண்டபோது, “அது எங்கள் குடும்பமில்லை. எனக்குத் தெரியாது” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x