

தஞ்சாவூர்
திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ் ஆட்சி, தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில் 12-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவில், மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சரும், உலகதிருக்குறள் மையத்தின் நிறுவனருமான ஆறுமுகம் பரசுராமன், தமிழகத்தின் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன், கவிஞரும், எழுத்தாளருமான வண்ணதாசன் என்கிற கல்யாணசுந்தரம் ஆகியோருக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை ஆளுநர் வழங்கினார்.
விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது: திருக்குறளை உலக நூலாக யுனெஸ்கோ அங்கீகரிக்க வேண்டும் என மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் வலியுறுத்தி உள்ளார். இதேபோல, திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக மத்திய அரசு அங்கீகாரம் செய்ய வேண்டும் என ஏராளமானோர் வலியுறுத்தி வருகின்றனர். எனவே, திருக்குறளை இந்தியாவின் முதன்மை நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ் வளர் மையத்தை உலக அளவில் ஆயிரம் இடங்களில் அமைக்க விரும்புகிறோம். இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, இம்மையம் உலகம் முழுவதும் அமைய மத்திய அரசுக்கு தமிழக ஆளுநர் பரிந்துரை செய்ய வேண்டும். கடந்த ஆண்டு மொரீஷியஸ் உட்பட 16 நாடுகளில் இம்மையம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற இடங்களில் அமைக்க மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும்.
கலைச்சொற்களை உருவாக்கக்கூடிய சொற்குவை திட்டத்துக்கு உலகத் தமிழர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. இத்திட்டத்தின் மூலம் புதிய கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. விழாவில், திரைப்பட நடிகர் சார்லி உள்ளிட்ட 150 பேர் முனைவர் பட்டமும், 246 பேர் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், 4 பேர் கல்வியியல் நிறைஞர் பட்டமும், 48 பேர் முதுநிலை பட்டமும், 146 பேர் இளங்கலை கல்வியியல் பட்டமும், 9,752 பேர் தொலைநிலைக் கல்வியில் படித்தற்கான பட்டமும் பெற்றனர்.