Published : 19 Oct 2019 03:13 PM
Last Updated : 19 Oct 2019 03:13 PM

தமிழக அரசுக்கு தக்க பாடம் புகட்ட இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

இரா.முத்தரசன்: கோப்புப்படம்

சென்னை

தமிழக அரசுக்கு தக்க பாடம் புகட்ட இடைத்தேர்தலில் திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (அக்.19) வெளியிட்ட அறிக்கையில், "வரும் 21-ம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகள் இடைத்தேர்தலில் வாக்காளர்கள், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக. - காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்திட வேண்டும்..

மாநில உரிமைகளைப் பறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்படக் கூடிய மத்திய அரசுக்கு தக்க பாடம் புகட்டவும், மாநில உரிமைகள் - நலன்கள் குறித்து சிறிதும் கவலைப்படாமல் தங்களது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தமிழக அரசுக்கு தக்க பாடம் புகட்டவும், திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுகிறோம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை நீட் நுழைவுத் தேர்வில் இருந்து விலக்களிக்க கோரும் இரு மசோதாக்கள் பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதை மத்திய அரசு நிராகரித்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, கடந்த 28 ஆண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டுமென தமிழக சட்டப்பேரவை மற்றும் தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானங்களை மத்திய அரசு நிராகரித்தது. இவற்றை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள மாநில அரசு முன்வராமல் மத்திய அரசின் நயவஞ்சக முடிவுகளை தமிழக அரசு கைகட்டி வாய்மூடி ஏற்றுக் கொள்கிறது.

கிராமம் முதல் உயர் மட்டம் வரை ஊழல் கரைபுரண்டு வெள்ளமென பெருக்கெடுத்து பாய்கிறது. தமிழ்நாடு காவல்துறை கலங்கப்பட்டு நிற்கின்றது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி விட்டது. சிறு கொள்ளை முதல் பெருங்கொள்ளை வரை தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றது. கொள்ளையர்கள் சிறிதும் அச்சமின்றி செயல்பட்டு வருகின்றனர். திருடச் செல்கிற இடத்தில் பிரியாணி சமைத்து சாப்பிடவும், சாவகாசமாக நீர் பருகவும், ஊஞ்சல் ஆடி மகிழவும் அவர்களால் முடிகின்றது.

கூலிப்படை நாளுக்கு நாள் பலமடைந்து கொலை சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. சட்டம் - ஒழுங்கு மிகச் சரியாகவே இருக்கின்றது என்று முதல்வர் மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் எதார்த்தம் அவ்வாறு இல்லை என்பது மக்களுக்கு மட்டுமல்ல, அவரது மனசாட்சிக்கும் நன்கு தெரியும்.

தலைமைச் செயலகத்தில் நான்கு துப்புரவு தொழிலாளர்கள் பணிக்கு, நான்காயிரம் பொறியியல் படித்த பட்டதாரிகள் விண்ணப்பம் செய்வதன் மூலம், வேலையின்மை கொடுமை எந்த அளவுக்கு தமிழகத்தில் உச்சத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் பிரச்சனைகள் தீர்ந்தபாடில்லை.

இத்தகைய நிலையில் மத்திய, மாநில அரசுகளுக்கு பாடம் புகட்டிட இரு தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெறச் செய்திட வேண்டும்" என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x