Published : 16 Oct 2019 09:59 AM
Last Updated : 16 Oct 2019 09:59 AM

நிலத்தடி நீரை தொடர்ந்து பருகியதால் சிறுநீரகக் கல் பாதிப்பு: சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க மக்கள் கோரிக்கை

ஆனைமலை அடுத்த சுள்ளிமேட்டுப்பதி கிராமத்தில் ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை பிடிக்கும் பெண்கள். படம்:எஸ்.கோபு.

பொள்ளாச்சி

ஆனைமலை அருகே சுத்திகரிக்கப் படாத ஆழ்குழாய் கிணற்றுத் தண்ணீரை தொடர்ந்து குடித்ததால் பலர் சிறுநீரகக் கல் பாதிப்புக்கு உள்ளானதாகவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனவும் மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனைமலை அடுத்த ஒடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட சுள்ளிமேட்டுப்பதி கிராமத்தில் இரவாளர் பிரிவைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆழ்துளைக் கிணற்று நீரே, மக்களின் ஒரே குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஆழ்குழாய் கிணற்றில் இருந்து எடுக்கப்படும் சுத்திகரிக்கப்படாத தண்ணீர், தரைமட்ட தொட்டியில் சேமித்து வைத்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்நீரை குடிப்பதால், இப்பகுதி மக்கள் பலர் சிறுநீரகக் கல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே, தங்கள் கிராமத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது:

தண்ணீரில் கரைந்துள்ள மொத்த திடப்பொருட்களின் அளவு 40 முதல் 60-க்குள் இருந்தால் குடிக்க உகந்த தண்ணீர் எனப்படுகிறது. அதேபோல தண்ணீரில் ஹைட்ரஜனின் அளவு (பி.ஹெச்) 6.5 முதல் 7.5 வரை இருந்தால் அமிலமும், காரமும் அதிகமில்லாத நடுநிலை தன்மை உடையது. ஹைட்ரஜனின் அளவு 6.5-க்கு கீழே இருந்தால் அமிலத்தன்மை உடையது. இந்த தன்மையுடைய தண்ணீரை தொடர்ந்து குடித்தால் வயிற்றுக் கோளாறு, வயிற்றுப் புண் ஆகிய பாதிப்புகள் உருவாகும். ஹைட்ரஜனின் அளவு 8.5-க்கும்மேல் இருந்தால் தண்ணீர் காரத்தன்மை உடையது. இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் என குடிநீர் குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுள்ளிமேட்டுப்பதி கிராமத்தில் பல ஆண்டுகளாக, சாலை, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. கிராமத்துக்கு அருகில் உள்ள ஆழியாறு ஆற்றில் 3 பேரூராட்சிகளுக்கான குடிநீர் திட்டங்கள் அமைக்கப்பட்டு 20-க்கும் அதிகமான குக்கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. குடிநீர் திட்டக் கிணறுகள் அமைக்கப் பட்டுள்ள பகுதிக்கு அருகிலேயே வசித்திருந்தும், எங்களுக்கு சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. இந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணற்று தண்ணீரை குடிநீராக பயன்படுத்தியதால் பலருக்கு சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இங்குள்ள தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன் வாடி மையத்தில் பயிலும் மாணவர் களும் இந்த தண்ணீரைத் தான் குடிக்க பயன்படுத்துகின்றனர். இதனால் மாணவர்களுக்கு அடிக்கடி வாந்தி, வயிற்றுவலி ஏற்படுகிறது. இந்த கிராமத்துக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

இதுகுறித்து கோட்டாட்சியர் ரா.ரவிக்குமார் கூறும்போது, ‘சுள்ளிமேட்டுபதி கிராமத்துக்கு போர்வெல் தண்ணீருக்கு பதிலாக மாற்று குடிநீர் திட்டம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. விரைவில் மாற்று குடிநீர் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x