Published : 29 Jul 2015 08:29 PM
Last Updated : 29 Jul 2015 08:29 PM

‘திருப்பூர் மாநகராட்சி பள்ளிக்கு அப்துல்கலாம் அளித்த சொத்து’

தனது நெருக்கடியான அலுவலுக்கிடையிலும் டெல்லி வந்த திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவிகளை அப்துல்கலாம் சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் அனுப்பிய கடிதத்தை தங்களது சொத்தாக போற்றி பாதுகாத்து வருகிறது அந்த பள்ளி.

இதுகுறித்து நெகிழ்ச்சி பொங்க கூறுகிறார் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க முன்னாள் தலைவர் ஈசுவரன்.



“குடியரசு தலைவராக அவரை மாளிகையில் சந்தித்து 10 ஆண்டுகள் ஆகின்றன. அந்த நினைவுகள் இன்னமும் அழியாத புகைப்படமாக, நெஞ்சில் பசுமையாகப் பதிந்துள்ளது. தலைநகர் டெல்லிக்கு, மாணவிகளை அழைத்துக்கொண்டு 2005-ம் ஆண்டு கல்விச் சுற்றுலா சென்றோம். வாய்ப்பிருந்தால் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமை சந்திப்பதாக திட்டம் வகுத்துக் கொண்டு 110 மாணவிகள், 10 ஆசிரியைகளுடன் சென்ற எங்களுக்கு இன்ப அதிர்ச்சி கிடைத்தது.

சுற்றுலாவின் இறுதி நாளன்று, கலாமை சந்திக்க அழைப்பு வந்தது. அப்துல்கலாமை அவரது மாளிகையிலேயே சந்திக்கப் போகிறோம் என்ற தகவல் கிடைத்ததும், மாணவிகள் அடைந்த உற்சாகத்துக்கு அளவே இல்லை. 45 நிமிடம் நேரம் ஒதுக்கி சந்தித்தார். மாநகராட்சிப் பள்ளி மாணவிகள் என்பதால், மிகுந்த உரிமையோடு பேசினார். ஒவ்வொருவரிடமும், தனித்தனியாகப் பேசி உற்சாகப்படுத்தினார்.

அப்போது அவர் கூறும்போது, ‘நீங்கள் எல்லோரும் தொழிலாளர் நகரமான திருப்பூரில் இருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் தாய், தந்தை கஷ்டப்பட்டு படிக்க வைப்பதை நீங்கள் உணர்வீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் வேலை தேடுபவராக இருக்கக்கூடாது. மற்றவர்களுக்கு வேலை கொடுப்பவராக மாற வேண்டும்’ என்றார். இந்த சந்திப்பு எங்களின் வாழ் நாளில் மறக்கமுடியாத தருணமாக அமைந்தது.

தமிழகத்தில் இருந்து மாநகராட்சிப் பள்ளி ஒன்று, டெல்லியில் அப்துல்கலாமை அப்போது சந்தித்தது திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மட்டுமே என்பது எங்களுக்குப் பெருமிதம்.

திருப்பூர் அருகே ஆண்டிபாளையத்திலிருந்து கல்விச் சுற்றுலாவுக்காக டெல்லி வந்திருந்த, பூங்குழலி என்ற மாணவியின் தாய், தன் தோடு உள்ளிட்ட நகைகளை அடமானம் வைத்து, கல்விச் சுற்றுலாவுக்கு மகளை அனுப்பி வைத்தார்.

‘தோடு எப்ப வேணாலும் வாங்கிக்கலாம்... ஆனால் எம் பொண்ணு, எப்ப வேணும்னாலும் கலாம் அய்யாவை பார்க்க முடியாது’என அவர் அனுப்பி வைத்தது, கலாம் மீதான மரியாதையை எடுத்துக்காட்டியது.

இந்தச் சந்திப்பு முடிந்ததும் ஜெய்வாபாய் பள்ளிக்கு கலாம் ஒரு கடிதம் அனுப்பினார். அதில், ’உங்கள் பள்ளிக் குழந்தைகளை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. குழந்தைகளின் அறிவு மிகவும் கூர்மையாக உள்ளது. அதை வளர்த்தெடுங்கள்’ என கடிதம் எழுதியிருந்தார்.

அது, இப்போதும் பள்ளியின் சொத்தாக போற்றி பாதுகாக்கிறோம்’ என்றார் நெகிழ்ச்சி பொங்க.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x