Published : 11 Oct 2019 01:05 PM
Last Updated : 11 Oct 2019 01:05 PM

புதுச்சேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டாத அமைச்சர்கள்; கண்டுகொள்ளாத எம்எல்ஏக்கள்

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

தமிழக இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபடும் சூழலில் புதுச்சேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் போதிய அளவு ஆர்வம் காட்டாத சூழலே நிலவுகிறது.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத் தேர்தல் வருகிற 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்து பிரச்சாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் அடுத்த தேர்தல் நடைபெற ஒன்றரை ஆண்டுகளே இருக்க, மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரியில் அதிமுக சார்பில் 11 அமைச்சர்கள் வரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் புதுச்சேரி அருகேயுள்ள விழுப்புரம் விக்கிரவாண்டியிலும் பல அமைச்சர்கள் வாக்குகளைச் சேகரிக்கின்றனர். எதிர்க்கட்சிகள் தரப்பில் கூட்டணிக் கட்சியில் முக்கியத் தலைவர்களும் வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர்.

ஆனால், புதுச்சேரியில் நிலைமை தலைகீழாக உள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ் தரப்பில் முதல்வர் நாராயணசாமி தினந்தோறும் வாக்குகளைச் சேகரிக்கிறார். இவருக்கு தொகுதியை விட்டுத்தந்த ஜான்குமாரை பலத்த போட்டிக்கு இடையே காமராஜர் நகர் தொகுதியில் வேட்பாளராக்கியுள்ளார். மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயமும், கந்தசாமியும் வாக்குச் சேகரிப்பில் பங்கேற்கின்றனர். இதர அமைச்சர்கள் தரப்பினர் தொடங்கி பல காங்கிரஸ் எம்எல்ஏக்களும் போதிய ஆர்வம் காட்டாதது வெளிப்படையாகவே தெரிகிறது. சில எம்எல்ஏக்கள் தொகுதிப் பக்கம் பிரச்சாரத்துக்கே வராத சூழல் உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் குறிப்பிடுகின்றனர்.

முதல்வர் நாராயணசாமி

காங்கிரஸ் தரப்பில் விசாரித்தபோது, "அமைச்சர்களுக்கு தொகுதியில் குறிப்பிட்ட பகுதிகளை பிரச்சாரத்துக்கு ஒதுக்கியுள்ளோம். அங்கு பணிகளைச் செய்வார்கள். அனைத்து நிர்வாகிகளும் பிரச்சாரத்தில் உள்ளனர். மு.க.ஸ்டாலின் உட்பட முக்கியத் தலைவர்கள் அடுத்த வாரம் பிரச்சாரத்துக்கு வருகிறார்கள்" என்று தெரிவிக்கின்றனர்.

அத்துடன் முக்கிய கூட்டணிக் கட்சியான திமுக தரப்பும் பிரச்சாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. அதுதொடர்பாக விசாரித்தபோது, "திமுகவில் தீவிர விசுவாசியாக இருந்து தேர்தலிலும் போட்டியிட்டார். அதன் பிறகு அவர் காங்கிரஸுக்குச் சென்றார். இதுவே திமுகவினர் ஆர்வம் காட்டாததற்குக் காரணம்," என்றனர்.

அதிமுகவுக்கு முக்கியத்துவம் தரும் என்.ஆர்.காங்கிரஸ்

எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸில் தொகுதிவாரியாக நிர்வாகிகளே நியமிக்கப்படாத சூழல் தொடர்கிறது. கடந்த தேர்தலில் இத்தொகுதியில் 2-ம் இடம் பிடித்த அதிமுகவும் 3-ம் இடம் பிடித்த என்.ஆர்.காங்கிரஸும் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது பலத்தை நிருபிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவர் ரங்கசாமி வீடு விடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறார். உடன் அதிமுக சட்டப்பேரவைக்குழு தலைவர் அன்பழகன் தொடங்கி அதிமுகவினர் பலரும் பிரச்சாரத்தில் பங்கேற்கின்றனர்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியிலுள்ள முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், தற்போதைய எம்எல்ஏக்களும் போதிய அளவு ஆர்வத்துடன் பிரச்சாரத்தில் காண முடிவதில்லை. அதே நேரத்தில் பிரச்சாரத்தில் அதிமுகவுக்கு அதிக முக்கியத்துவத்தை ரங்கசாமி தருவதைப் பலரும் பார்க்கின்றனர்.

ரங்கசாமி: கோப்புப்படம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸானது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்பதை உறுதியாக வெளிப்படுத்தும் வகையில் செயல்பாடு உள்ளது. இருவரும் முதல்வரையும், காங்கிரஸ் வேட்பாளரையும் குற்றம் சாட்டியே கருத்துகளை முன்வைக்கின்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு மவுனம் கலைத்தாலும் தேர்தலின் போது மட்டுமே ரங்கசாமி 'வாய்ஸ்' தருவார் என்பதை இம்முறையும் நிரூபித்துள்ளார். எதிர்க்கட்சித் தரப்பிலும் தமிழகத்திலிருந்து முக்கியத் தலைவர்கள் யாரும் பிரச்சாரத்துக்கு வராத சூழலே நிலவுகிறது. ஆளும் தரப்பும், எதிர்க்கட்சிகள் தரப்பும் இக்கட்டான சூழலிலேயே இடைத்தேர்தலைஅணுகுகின்றன.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x