Published : 10 Oct 2019 04:37 PM
Last Updated : 10 Oct 2019 04:37 PM

திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல்: ஸ்டாலின்

நெல்லை

திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.10), நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட முன்னீர்பள்ளம், தருவை, செங்குளம் ஆகிய பகுதிகளில், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு ஆதரவு கேட்டு, நடைபயணம் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதோடு, அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "தற்போதைய ஆட்சியாளர்கள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால், அவர்கள் கட்சி தோற்றுவிடும் என்ற காரணத்தினால், அதனை நடத்த முன்வரவில்லை.

ஆனால் அந்த தோல்வி பயத்தை மறைக்க, தேர்தல் நடத்தவிடாமல் திமுக தான் வழக்குத் தொடுத்தது என்று ஒரு பொய்யைச் சொல்லுகிறார்கள். திமுக வழக்குத் தொடுத்தது என்றால், முறையாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி வழக்குத் தொடுத்தோம்.

பெண்களுக்கு, தாழ்த்தப்பட்டோருக்கு, பிற்படுத்தப்பட்டோருக்கு, மலைவாழ் மக்களுக்கு என்று இட ஒதுக்கீடு இருக்கிறது. அந்த இட ஒதுக்கீட்டை ஒழுங்காக வழங்க வேண்டும். அவற்றை ஒழுங்குபடுத்தி, முறையாக நடத்த கோரினோம். வார்டுகள் பிரிப்பது முறையாக இல்லை என்றோம். அதனை சரிசெய்து முறைப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை, அவர்களால் முறையாக சரிசெய்ய முடியவில்லை. அதனால், தான் தேர்தலைத் தள்ளிக்கொண்டே போகிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்,"

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x