Published : 24 Sep 2019 04:22 PM
Last Updated : 24 Sep 2019 04:22 PM

தமிழகம், புதுச்சேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு: மார்க்சிஸ்ட் தீர்மானம்

புதுச்சேரி

தமிழகம், புதுச்சேரி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் புதுச்சேரியில் இன்று (செப்.24) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. கட்சியின் தமிழ்மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே.ரங்கராஜன்,எம்.பி., உ.வாசுகி, பி.சம்பத், அ.சவுந்தரராஜன் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

* விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு முடிவு செய்கிறது.

மத்தியில் உள்ள பாஜக கூட்டணி அரசில் பினாமி போலவே தமிழக அதிமுக அரசு மாறிவிட்டது. மோடி அரசு கொண்டு வரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களையும் எவ்வித எதிர்ப்பும் இன்றி உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது.

நீட் தேர்வு முதல் ஹைட்ரோகார்பன் திட்டம் வரை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடி வருகின்றன. இந்தப் பின்னணியில் தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலிலும் மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளுக்குத் தகுந்த பாடம் புகட்ட வேண்டியுள்ளது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி, காமராஜர் நகர் தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டியது அவசியமாகும். எனவே இந்தத் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது என்றும், அவர்களது வெற்றியை உறுதி செய்ய கூட்டணி கட்சிகளோடு இணைந்து தீவிரமாக களப்பணியாற்றுவது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு முடிவு செய்கிறது.

* தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கிடையிலான பல்வேறு நதிநீர் பிரச்சினைகள் குறித்து இருமாநில முதல்வர்களும் செப்டம்பர் 25-ம் தேதி சந்தித்துப் பேசவுள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்கிறது. தமிழகத்தின் பாசனம் மற்றும் குடிநீர் சம்பந்தமான பல்வேறு ஒப்பந்தங்கள் கேரள மாநிலத்துடன் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது . இதில் அவ்வப்போது சில சர்ச்சைகள் ஏற்பட்டு இருமாநிலங்களுக்கு இடையிலான உறவில் சில பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த சந்திப்பின் மூலம் இருமாநில உறவுகள் பலப்படுத்துவதுடன் நிலுவையிலுள்ள அனைத்து நதிநீர் மற்றும் பாசன பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையுள்ளது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x