Last Updated : 24 Sep, 2019 03:12 PM

 

Published : 24 Sep 2019 03:12 PM
Last Updated : 24 Sep 2019 03:12 PM

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யாவுக்கு முன் ஜாமீன் மறுப்பு: சரணடைந்தால் பரிசீலிப்பதாக நீதிபதி அறிவிப்பு

மதுரை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித் சூர்யாவுக்கு முன் ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுத்துவிட்டது.

ஆள்மாறாட்ட விவகாரம் தீவிரக் குற்றம் என்பதால் இதில் உண்மை தெரிய வேண்டும். எனவே மாணவர் சரணடைந்தால் ஜாமீன் பரிசீலிக்கப்படுமே தவிர முன் ஜாமீனுக்கு வாய்ப்பில்லை என்று நீதிமன்றம் கூறியது.

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். தான் நினைவுக்கு வருகிறது

முன்னதாக மாணவர் உதித் சூர்யா முன்ஜாமீன் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி பேசும்போது, "நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடைபெற்றிருந்தால், அது மிகவும் வருத்தம் அளிக்கும் செயலாகும். நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது 'வசூல்ராஜா எம்பிபிஎஸ்' திரைப்படத்தில் நடைபெற்றது போல் உள்ளது" என்று கூறினார்.

மாணவர் உதித் சூர்யாவை சிபிசிஐடி முன்பு விசாரணைக்கு ஆஜர்படுத்த முடியுமா என்று அவருடைய வழக்கறிஞர்களிடம் வினவினார். மேலும், இதற்கான சாத்தியத்தை மாணவர் தரப்பிடம் அவருடைய வழக்கறிஞர்களே கேட்டுத் தெரிவிக்கும்படி நீதிபதி கூறினார்.

அதேபோல், உதித் சூர்யா வழக்கு முழுமையாக எப்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படும் என தமிழக அரசுக்கும் கேள்வி எழுப்பினார். பின்னர், இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

முன் ஜாமீன் கிடையாது..

மீண்டும் வழக்கு பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில், "மாணவர் உதித் சூர்யாதான் மகாராஷ்டிராவில் தேர்வு எழுதினார். சிலர் பணம் பறிக்கும் நோக்கத்தில் தேவையற்ற சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். அதனால் மாணவர் கடும் மன உளைச்சலில் உள்ளார். அவருக்கு முன் ஜாமீன் வழங்கினால் விசாரணைக்கு ஆஜர்படுத்துகிறோம்" என்று கூறப்பட்டது.

அதற்கு அரசுத் தரப்பில், குற்றத்துக்கான முகாந்திரம் இருப்பதால் மாணவரைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "தேர்வில் ஆள்மாறாட்டம் என்பது தீவிரமான குற்றம். இதன் பின்னணியில் உள்ள உண்மை தெரிய வேண்டும். மனுதாரர் மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுவதாலேயே அவர் நீதிமன்றத்தில் சரணடைந்தால் உடனே ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க கருணை அடிப்படையில் நீதிமன்றம் தயாராக இருக்கிறது. ஆனால், முன் ஜாமீனுக்கு வாய்ப்பே இல்லை. மாணவர் சரணடைவது குறித்து அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டுக் கூறலாம்" எனத் தெரிவித்து வழக்கை அடுத்த செவ்வாய்க்கிழமைக்கு (அக்.1-ம் தேதி) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x