Published : 03 Jul 2015 10:45 AM
Last Updated : 03 Jul 2015 10:45 AM

வேளச்சேரியில் அடிக்கடி விபத்து - உங்கள் குரல்: வாசகர்களின் புகார்கள்

‘தி இந்து’ வின் ‘உங்கள் குரல்’ சேவையைப் பயன்படுத்தி ஏராளமான வாசகர்கள் தினந்தோறும் தங்களது புகார்கள், குறைகளை பதிவு செய்துவருகின்றனர். அதில் வாசகர்கள் பகிர்ந்துகொண்ட புகார்கள்:

‘ஆதார்’ கிடைக்குமா?

‘ஆதார்’ அட்டை வழங்குவதில் எந்த ஒரு ஒழுங்குமுறையும் கடைபிடிக்கப்படாததால் பாமர மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை விட்டுவிட்டு ஆதார் மையங்களில் காத்திருந்து கஷ்டப்படுகிறார்கள். சிபாரிசுகளுடன் செல்பவர்களுக்கு விரைவாக ஆதார் அட்டை கிடைத்துவிடுகிறது. எனவே, அனைவருக்கும் ஆதார் அட்டை சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கி.குமரேசன்,வளசரவாக்கம்.

***

மலை மீது ஆக்கிரமிப்பு

திரிசூலம் அருகிலுள்ள பல்லாவரம் மலை மீது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வீடுகள் உருவாகி வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு அருகில் விமான நிலையம் இருப்பதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். இங்கு கட்டப்படும் வீடுகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் எவ்வாறு பட்டா மற்றும் மின் இணைப்பு கொடுக்கிறது என தெரியவில்லை. எனவே, மலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.சித்தார்த்தன்,தாம்பரம்.

***

கூடுதல் பஸ் வேண்டும்

மேற்கு சைதாப்பேட்டை-பாரிமுனை வரை செல்லும் ‘18-கே’ பஸ்கள் குறைவான எண்ணிக்கையில்தான் இயக்கப்படுகின்றன. இது போதுமானதாக இல்லை. இவ்வழித்தடத்தில் அதிகளவு பயணிகள் பயணம் செய்வதால் எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால், வயதானவர்கள், பெண்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே இவ்வழித்தடத்தில் அதிக அளவில் பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆர்.எத்திராஜன்,மேற்கு சைதாப்பேட்டை.

***

அடிக்கடி விபத்துகள்..

கிண்டி கன்னிகாபுரம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் இங்கு போக்குவரத்துக் காவலரை நியமித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். இரு தினங்களுக்கு முன்பு கூட இளைஞர் ஒருவர் இங்கு விபத்தில் இறந்தார். எனவே, காவலரை நியமிப்பதோடு, சாலையில் சென்டர் மீடியனும் அமைக்க வேண்டும்.

ஏ.பாலன், வேளச்சேரி.

***

நிழற்குடை தேவை

ஆழ்வார்திருநகர் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பயணிகள் சிரமப்படுகின்றனர். வெயில், மழைக்குக் கூட ஒதுங்க முடியாமல் பயணிகள் அவதிப் படுகின்றனர். எனவே அந்நிறுத் தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.பாண்டிசெல்வம்,கோடம்பாக்கம்.

***

குடிநீர் தட்டுப்பாடு

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகத்சிங் தெரு, வி.பி.சிந்தன் தெரு, பசும்பொன் தெரு ஆகிய தெருக்களில் குடிநீரே வருவதில்லை. இதனால், பொதுமக்கள் குடிநீருக்காக பல கி.மீட்டர் தூரம் அலைய வேண்டியுள்ளது. இதுகுறித்து, பஞ்சாயத்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கே.குப்புசாமி,பாடியநல்லூர்.

***

போக்குவரத்து நெரிசல்

தாம்பரம் - காஞ்சிபுரம் செல்லும் சாலையில் மண்ணிவாக்கம் என்ற இடத்தில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. தினமும் இச்சாலையில் நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகள் செல்கின்றனர். இங்கு விபத்து நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக உடனடியாக அப்பகுதியில் போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும்.

கே.வெங்கடேசன்,முடிச்சூர்.

***

சாலை சீராகுமா?

அரும்பாக்கம்-கோயம்பேடு செல்லும் சாலையில் அரை கிலோ மீட்டர் சாலை தார்ச் சாலையாக இல்லாமல் வெறும் கற்களாலான சாலையாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். கடந்த சில மாதங்களாக இதே நிலை நீடித்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

சி.தமிழ்மணி, கே.கே.நகர்.

***

பஸ் வசதி இல்லை

மேடவாக்கம் பிரதான சாலையில் உள்ள உள்ளகரம் புழுதிவாக்கத்திலிருந்து வேளச்சேரிக்கோ, பரங்கிமலைக்கோ நேரடி பஸ் வசதி இல்லை. ஆட்டோவில் செல்ல அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். குறைந்தது சிற்றுந்து வசதியாவது ஏற்படுத்தித் தர வேண்டும். இதேபோல் ஆலந்தூருக்கும் நேரடி பஸ் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஆர்.ஏகாம்பரநாதன், புழுதிவாக்கம்.



அன்புள்ள வாசகர்களே..

‘தி இந்து’ செய்திகளை வாசிக்கும்பொழுதில் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்கள் / திருத்தங்கள் / சந்தேகங்கள் / நீங்கள் எதிர்கொள்ளும் நேரடி பிரச்சினைகள், பார்க்கும் நிகழ்வுகள் - கேட்டறியும் சமூகப் பிரச்சினைகள் என எதுவானாலும் சரி... அலைபேசி மூலம் உடனுக்குடன் தொடர்புகொண்டு உங்கள் குரலில் பதிவு செய்யலாம். நீங்கள் தரும் உபயோகமான தகவல்களை எங்கள் செய்தியாளர்கள் மூலம் சரிபார்த்து செய்தியாக்கக் காத்திருக்கிறோம்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்...

044-42890002 என்ற எண்ணை உங்கள் அலைபேசி வழியாக அழையுங்கள். உடனடியாகத் தொடர்பு துண்டிக்கப்படும். அடுத்த சில நொடிகளில், உங்கள் அலைபேசிக்கு அழைப்பு வரும் (அழைப்புக் கட்டணத்துக்கான செலவை நீங்கள் ஏற்கும்படி ஆகக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு). மறு முனையில் ஒலிக்கும் குரலின் வழிகாட்டுதல்படி, 1 அல்லது 2-ஐ அழுத்திவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். நினைத்ததை நினைத்தமாத்திரத்தில் எந்த நேரத்திலும் எங்களோடு இனி பகிர்ந்துகொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x