Published : 23 Sep 2019 05:07 PM
Last Updated : 23 Sep 2019 05:07 PM

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தாவிடில் 50 ஆண்டுகளில் மனித இனம் இருக்காது: ராமதாஸ் வேதனை

சென்னை

பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தாவிடில் அடுத்த 50 ஆண்டுகளில் மனித இனம் இருக்காது என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''காலநிலை மாற்றத்தால் புவி வேகமாக வெப்பமடைவது அதிகரித்து வருகிறது. இதனால் உலகம் அழிவின் விளிம்பு நிலையில் இருக்கிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால், கரியமில வாயுவின் விலை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிடும். அப்படிப்பட்ட சூழலில், அடுத்த 50 ஆண்டுகளில் மனித இனம் இருக்காது.

இதை யாரோ ஜோதிடர்கள் சொல்லவில்லை. விஞ்ஞானிகள் சொல்கின்றனர். இதனால், அவசர நிலைப் பிரகடனத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசையும் இந்திய அரசையும் கேட்டுக்கொள்கிறேன்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகள் தொடர்ந்து மாறுபட்ட பருவச் சூழல்களைச் சந்திந்து வருகின்றன. இதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சத்தில் உள்ளன. புவி வெப்பமயமாதலும், காற்று, நீர், நில மாசுபாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு உயிரினங்கள் அழியும் நிலை உண்டாகியுள்ளது. மனித குலத்துக்கும் அச்சுறுத்தலாகப் பருவநிலை மாற்றம் உள்ளது.

இதனால் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக வங்கி 2021-2025 ஆகிய ஐந்து ஆண்டுகளில் ரூ.14 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

காலநிலை மாற்றம் குறித்துப் பேசி வரும் ராமதாஸ், அவசர நிலைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x