Published : 21 Sep 2019 10:35 AM
Last Updated : 21 Sep 2019 10:35 AM

நன்னெறியை வளர்க்கும் கொங்கு மண்ணின் மைந்தர்! -பன்முகம் கொண்ட இயகோகா சுப்பிரமணியம்

ஆர்.கிருஷ்ணகுமார்

தொழில்நுட்ப வளர்ச்சியும், வசதியும் அதிகரித்து, மேற்கத்திய நாகரிகம் பரவி வரும் இச்சூழலில், நமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க நன்னெறிகளே உதவும். நற்பண்புகள், தாய்மொழி, இலக்கியம் மற்றும் ஆன்மிகத்தை இளைய தலைமுறையிடம் கொண்டுசேர்ப்பதே எங்களது நோக்கம் என்கிறார் கோவை நன்னெறிக் கழகத் தலைவர் இயகோகா சுப்பிரமணியம்(71).

நாள் முழுவதும் முகநூல், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களில் மூழ்கிக் கிடக்கும் இளைய தலைமுறையை மீட்டு, நன்னெறிகளை கற்றுத்தரும் வகையில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது நன்னெறிக் கழகம். அதன் தலைவரான இயகோகா சுப்பிரமணியம், தொழிலதிபர், எழுத்தாளர், இலக்கியவாதி, பேச்சாளர் என பன்முகம் கொண்டவர். கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள குளத்தூரில் அவரை சந்தித்தோம்.

"ஆதிநாராயணபுரம் என்ற இந்த குளத்தூர்தான் பூர்வீகம். பெற்றோர் நஞ்சப்ப கவுண்டர்-கணபதியம்மாள். சாதாரண விவசாயக் குடும்பம். அப்பா பஞ்சாலையில் பணிபுரிந்தார். இருகூர் அரசுப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு, பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் பி.யு.சி. படித்தேன். பின்னர், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் பி.இ. மெக்கானிக்கல் முடித்துவிட்டு,
நாக்பூரில் ரசாயனத் தொழிற்சாலை மற்றும் கோவையில் சாந்தி கியர்ஸ் நிறுவனம், எல்.ஜி. குரூப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரிந்தேன்.

1987-ல் ரங்கநாதன் மற்றும் இருவருடன் சேர்ந்து `இயகோகா சின்ட்ரான்ஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கினேன். பஞ்சாலை இயந்திரங்களின் முக்கிய உதிரிபாகமான `சிந்தடிக் ஸ்பின்டில் டேப்' தயாரிக்கத் தொடங்கினோம். 1991-ல் இந்தியாவிலேயே இந்த தயாரிப்பில் முதலிடம் வகித்தோம். 1992-1993-ல் ஆசியாவிலேயே அதிக விற்பனை செய்யும் நிறுவனமாக உயர்ந்தோம். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெபாசிட் நிறுவனம் 1996-ல் எங்கள் நிறுவனத்துடன் இணைந்தது. கூட்டாண்மை நிறுவனத்துடன், ஒரு பன்னாட்டு நிறுவனம் இணைந்து செயல்படத் தொடங்கியது அதுதான் நாட்டிலேயே முதல்முறையாகும்.

ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.100 கோடி வரை!

ரூ.1 லட்சம் முதலீட்டில் இந்நிறுவனத்தை தொடங்கினோம். 2014-ல் சில காரணங் களுக்காக அந்நிறுவனத்திலிருந்து நான் வெளியேறியபோது, ஆண்டு வர்த்தகம் ரூ.100 கோடி.பின்னர், இத்தாலியைச் சேர்ந்த கொரினோ என்ற நிறுவனத்துடன் இணைந்து, கன்வேயர் பெல்ட், ஃப்ளாட் பெல்ட் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் பிரான்ஸ் டெக் பெல்ட் என்ற நிறுவனத்தை கோவாவில் தொடங்கியுள்ளோம். அதேபோல, கோவையில் `சகோதரன்' என்ற ஸ்பின்டல் டேப் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறேன். வியட்நாம், இந்தோனேசியா, துருக்கி, சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், எகிப்து, ஈரான், பெரு, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இவற்றை ஏற்றுமதி செய்கிறோம்.கொங்கு மண் கலாச்சாரம், பண்பாடு, விருந்தோம்பல், மொழிக்கு மட்டும் சிறப்பு வாய்ந்தது அல்ல. தொழில்முனைவிலும் இப்பகுதியினர் இணையற்றவர்கள்.

பேச்சும், எழுத்தும்...

நான் பள்ளியில் படிக்கும்போதே பேச்சு, எழுத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். பள்ளி ஆண்டு விழா மலர்களில் கட்டுரை எழுதியுள்ளேன். 6-ம் வகுப்பு படிக்கும்போது நடந்த பேச்சுப் போட்டியில் வென்று, காமராஜர் கையால் பரிசு பெற்றேன். அதேபோல, 8-ம் வகுப்பில் கோவை மாவட்ட அளவிலான போட்டியில் வென்று, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவிடம் பரிசு பெற்றேன்.
எனது கதை, கவிதைகளைப் படித்த கவிஞர் சிற்பி, அவற்றை புத்தகமாக தொகுக்கலாம் என ஊக்குவித்தார். 1990-களில் `நெஞ்சில் தவழும் ராகங்கள்' என்ற முதல் கதை, கவிதை தொகுப்பை வெளியிட்டேன். அதேபோல, மரபின் மைந்தன் முத்தையா நடத்தும் `நமது நம்பிக்கை' இதழில் எனது வெளிநாட்டுப் பயண அனுபவங்களை தொடர் கட்டுரையாக எழுதினேன். அவற்றைத் தொகுத்து `இன்னொரு யுகசந்தி' என்ற புத்தகமாக வெளியிட்டேன். இந்த நூலுக்கு ஜெயகாந்தன் முகவுரை எழுதியிருந்தார். சென்னை இலக்கிய சிந்தனை அமைப்பின் விருது இந்நூலுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து, சுயமுன்னேற்ற நூல்களான திரைகடல் ஓடு திரவியம் தேடு, வெற்றி வெளிச்சம், வெற்றிச் சூடி, நிறம் மாற்றும் மண் ஆகியவற்றையும், மழை வாசம் என்ற கவிதை தொகுப்பையும் வெளியிட்டேன். நா.பார்த்தசாரதி நாவல்களை ஆய்வு செய்து `ஊற்றுக்கண்' என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டேன். தற்போது `விந்தை மாந்தர்' என்ற சுய பண்பு முன்னேற்ற நூலை எழுதியுள்ளேன். இதற்கு ஜெயமோகன் முன்னுரை எழுதியுள்ளார். வரும் ஜனவரி மாதத்துக்குள் இந்நூல் வெளியாகும்.

நன்னெறிக் கழக செயல்பாடுகள்...

கோவையில் ஏறத்தாழ 63 ஆண்டுகளுக்கு முன் உருவானது நன்னெறிக் கழகம். பி.ஏ.ராஜு செட்டியார், என்.மகாலிங்கம், ஜி.கே.சுந்தரம், வக்கீல் குப்புசாமி உள்ளிட்டோர் இதன் புரவலர்களாக இருந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இதில் இணைந்து, அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறேன்.

தமிழ் மொழி, இலக்கியம், ஆன்மிகம் தொடர்பான விழிப்புணர்வை மாணவர்கள், இளைஞர்களிடையே ஏற்படுத்துவதே இவ்வமைப்பின் நோக்கம். ஆன்மிகம் என்பது கடவுளை சார்ந்தது மட்டுமல்ல, வாழ்வில் துன்பப்படும் நேரங்களில் அதற்கான தீர்வை அளிப்பதுமாகும். மாணவர்கள், இளைஞர்களுக்கான கட்டுரைப் போட்டி உள்ளிட்ட போட்டிகளையும் நடத்தி பரிசு வழங்குகிறோம். தொடர்ந்து, கருத்தரங்கு, பயிலரங்குகளை நடத்தி வருகிறோம். தமிழ் இலக்கியவாதிகளுக்கு தமிழ் நெறிச் செம்மல் விருதுகளை வழங்கியுள்ளோம். சிறந்த சமூகப் பணியாளர்களான வனிதா மோகன், சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு நன்னெறிச் செம்மல் விருதுகளை வழங்கியுள்ளோம்.

பாரம்பரிய கோயில் கட்டிடக் கலையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள, ஆன்மிகச் செயல்பாட்டாளர்கள் வி.எஸ்.ஜெயபால், எஸ்.வேலுமணி ஆகியோருக்கு கோவையில் வரும் 29-ம் தேதி நடைபெறும் விழாவில் `இறைநெறிச் செம்மல்' என்ற விருதை வழங்குகிறோம்.

தற்போதைய சூழலில் மாற்றங்களைத் தவிர்க்க முடியாது. ஆனால், அந்த மாற்றம் நமது பண்பாட்டுக் கூறுகளை சிதைத்து
விடுவதாக அமைவது வேதனையளிக்கிறது. எனவே, நமது அடிப்படைப் பண்புகள் பாதுகாக்கப்பட வேண்டும். மதம், ஜாதியின் பெயரால்மனிதர்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவோரை இனங்கண்டு, அவர்களிடமிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் சமூகம் சார்ந்து இயங்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டாலே, அந்த சமூகத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபட மாட்டார்கள். நமது முன்னோர் வகுத்த நன்னெறிகளை தவறாது கடைப்பிடித்து, சமூகத்துக்குப் பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும். எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அப்போதுதான், உலகுக்கே வழிகாட்டுகிறது இந்தியா என்ற பெருமையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் " என்றார் உறுதியுடன் இயகோகா சுப்பிரமணியம்.

`இயகோகா' பெயருக்கு அர்த்தம் என்ன?

தொழில் காரணமாக உலகின் பெரும்பாலான முக்கிய நாடுகளுக்குச் சென்றிருக்கிறார் இயகோகா சுப்பிரமணியம். எல்லாம் சரி, அதென்ன `இயகோகா?' என்று கேட்டதற்கு சிரித்துக்கொண்டே, 1987-ல் நிறுவனம் தொடங்கியபோது, அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனத் தலைவராக இருந்தவரும், ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியவருமான லீஇயாகோகாவை முன்மாதிரியாகக் கொண்டு, எங்கள் நிறுவனத்துக்கு `இயகோகா சின்ட்ரான்ஸ்' என்று பெயர்சூட்டினோம்.

பின்னர், அவருக்கு ஒரு கடிதம் அனுப்பினோம். அவர் பாராட்டி கடிதம் அனுப்புவார் என்று எதிர்பார்த்த நிலையில், அந்தப் பெயரை பயன்படுத்தக் கூடாது என வக்கீல் நோட்டீஸ் வந்தது. இயக்கம், ஊக்கம், ஆக்கம் என்பதை மையமாகக் கொண்டே `இயகோகா' என்ற பெயரை வைத்திருப்பதாக பதில் கடிதம் அனுப்பினோம். அதற்குப் பிறகு அவர்கள் தரப்பிலிருந்து கடிதம் எதுவும் வரவில்லை. இந்தியர்கள் உணர்ச்சிப்பூர்வமாகவும், மரியாதையுடன் செயல்படும் சூழலில், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் எதையும் வணிக நோக்கில் சிந்திப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டோம்" என்றார் இயகோகா சுப்பிரமணியம்.

கோவை மேலாண்மை சங்கத்தின் சிறந்த தொழில்முனைவோர் விருது, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் சிறந்த முன்னாள் மாணவர் விருதெல்லாம் பெற்றிருந்தாலும், நன்னெறி காக்கும் கொங்கு மண்ணின் மைந்தர் என்று நண்பர்கள் அழைப்பதையே பெருமையாகக் கருதுகிறார் இவர். "இன்னும் ஒரேயொரு கேள்வி. ஏன் சார் திருமணம் செய்துகொள்ளவில்லை?" என்று கேட்டபோது, அதற்கும் சிரித்துக்கொண்டே, "குறிப்பிட்ட காரணமெல்லாம் ஒண்ணுமில்ல; அப்படியே வாழ்க்கை ஓடிடுச்சு. இப்ப 70 வயசையும் தாண்டியாச்சு. இனிமே யாருங்க பொண்ணு கொடுப்பாங்க?" என்றார் நகைச்சுவையாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x