Published : 09 Sep 2019 01:53 PM
Last Updated : 09 Sep 2019 01:53 PM

​​​​​​​பயனாளிகள் வங்கிக் கணக்கில் அரிசிக்கான பணத்தைச் செலுத்தக் கோரும் கிரண்பேடி; நீதிமன்றத்தை நாட ஆலோசிக்கும் புதுச்சேரி அரசு

கிரண்பேடி மற்றும் நாராயணசாமி: கோப்புப்படம்

புதுச்சேரி

அரிசிக்கான பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவதால் நிதிக் கசிவையும், ஊழலையும் தடுக்க முடியும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம் தந்துள்ளார். இந்நிலையில் இப்பிரச்சினையில் உயர் நீதிமன்றத்தை நாட அரசுத் தரப்பினர் ஆலோசித்து வருகின்றனர். அரிசியோ, பணமோ அதை மாதந்தோறும் சரியாகத் தாருங்கள் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு ஆட்சியமைத்து 39 மாதங்களாகின்றன. இதில் ரேஷனில் 17 மாதங்கள் அரிசியும், ஐந்து மாதங்கள் அரிசிக்கான பணம் பயனாளிகள் வங்கிக் கணக்கிலும் செலுத்தப்பட்டுள்ளது. அரிசியைத் தொடர்ந்து தரமுடியாமல் போனதற்கு ஆளுநர் கிரண்பேடி தலையீடு தான் காரணம், அரிசிக்குப் பதிலாக பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் தரக் கூறினார் என்று அரசுத் தரப்பில் தெரிவித்தனர்.

புதுச்சேரி அரசு தொடர்ந்து பயனாளிகளுக்கு இலவச அரிசி தர முடிவு எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கு காங்கிரஸ், திமுக, எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக ஆகியோரும் ஆதரவு தந்தனர். ஆனால், பாஜக தரப்பைச் சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் அப்போது அவையில் இல்லை.

இச்சூழலில் அரசு தீர்மானத்தை எடுத்துக்கொண்டு முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் ராஜ்நிவாஸ் சென்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை நேற்று முன்தினம் சந்தித்தனர். ஆனால் கிரண்பேடி அரிசி தர மறுத்து விட்டதாகக் கூறி ஆளுநர் மாளிகையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

அதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, "இலவச அரிசி திட்டத்தை எதிர்க்கவில்லை. புகார்களால் அரிசிக்குப் பதிலாக பணம் தரக் கோருகிறோம். இரு தரப்புகளிலும் வேறுபாடு நிலுவுவதால் கோப்பு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசின் பதில் வரும் வரை அரிசிக்குப் பதிலாக பணம் தரக் கோரியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது முதல் அரசுக்கும் ஆளுநர் கிரண்பேடிக்கும் மோதல் நீடிக்கிறது. இச்சூழலில் நீதிமன்றத்தை நாடியதால் மக்களால் தேர்வான அரசுக்குத்தான் அதிகாரம் என்று தீர்ப்பு வந்தது. உச்ச நீதிமன்றமும் அதனை உறுதி செய்தது. இதையடுத்து ஆளுநர் கிரண்பேடி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் அமைச்சரவை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதால் அரசு சார்பில் மீண்டும் உயர் நீதிமன்றத்தை நாடுவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகின்றனர்.

உடனடியாக வங்கிக் கணக்கில் பணம் தரக் கோரும் ஆளுநர்

இச்சூழலில் துணைநிலை ஆளுநர் வாட்ஸ்அப்பில் வெளியிட்ட தகவல்:

"இலவச அரிசி ஏழைகளுக்கும், தேவைப்படுவோருக்கும் மட்டுமே தேவை. அரசாங்கம் நேரடியாக அரிசி வாங்கக்கூடாது. மக்களுக்கு அதற்கான பணத்தைத் தந்து அதன் மூலம் அவர்களே வாங்க வேண்டும். பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக நிதியைச் செலுத்த வேண்டும். அதன்மூலம் அவர்களே நேரடியாகப் பிடித்த அரிசியை வாங்கிக்கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு அரிசி வழங்குவதில் எதிர்ப்பாக ராஜ்நிவாஸ் இல்லை. பயனாளிகள் கணக்கில் பணத்தைச் செலுத்தி அவர்களே வாங்குவதால் நிதிக் கசிவையும், ஊழலையும் தடுக்க முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

17 மாதங்களுக்கு மீண்டும் கிடைக்குமா?

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தரப்பில் கேட்டதற்கு, "புதுச்சேரி அரசு ஆட்சி அமைத்த பிறகு ஆண்டுதோறும் இலவச அரிசிக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் இதுவரை 17 மாதங்களுக்கு அரிசியோ, அதற்கான பணத்தை வங்கிக் கணக்கிலோ பயனாளிகளுக்குத் தரவில்லை. அத்தொகை என்னவானது? அதைத் திருப்பி பயனாளிகளுக்குத் தருவார்களா என்பதற்கு பதிலும் அரசு தரவில்லை. தொடர்ந்து அரிசி தரப்படுவது இல்லை. அரிசி தாருங்கள். இல்லாவிட்டால் அதற்கான பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துங்கள். ஏதாவது ஒன்று செய்யுங்கள். அரசும், ஆளுநரும் மோதிக்கொண்டால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். ஏதாவது உடனடியாக முடிவு செய்யுங்கள்" என்கின்றனர்.

செ.ஞானபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x