Published : 09 Sep 2019 01:00 PM
Last Updated : 09 Sep 2019 01:00 PM

என்னை அசிங்கப்படுத்தவே வீடியோ வெளியீடு: அமமுக புகழேந்தி விமர்சனம்

சென்னை

தன்னை அசிங்கப்படுத்தவே அமமுக ஐடி பிரிவு சார்பில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக, புகழேந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இங்கு யாருடனும் இருக்க எனக்கு விருப்பம் இல்லை என்று அமமுக முக்கிய நிர்வாகியான புகழேந்தி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், ''இருக்கும் இடத்திலும் செல்லும் இடத்திலும் முகாந்திரம் இல்லாமல், நாம் இருக்கக் கூடாது. நம்முடைய பதவியை சரிசெய்துவிட்டுத்தான் செல்ல வேண்டும். அதனால் உட்கார்ந்திருக்கிறேன். இங்கு யாருடனும் இருக்க எனக்கு விருப்பம் இல்லை. நிறையத் தியாகம் செய்திருக்கிறேன்.

முகவரி இல்லாமல் 14 வருடங்கள் வெளியே இருந்த டிடிவி தினகரனை ஊருக்குக் காண்பித்தது புகழேந்திதான். உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் ஜெயலலிதா இறக்கும்போது கூட தினகரன் கிடையாது. நாம்தான் போராட்டங்களை மேற்கொண்டுதான் அவரை வெளியே காண்பித்தோம்'' என்று புகழேந்தி தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதால், அமமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வீடியோ வெளியானது குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய புகழேந்தி, ''கோவையில் நான் கட்சியினருடன் பேசியது உண்மை. ஆனால் அதிருப்தியில் இருந்தவர்களைச் சமாதானப்படுத்தவே அப்படிப் பேசினேன்.

வீடியோவில் நான் கட்சியை விட்டுப் போகிறேன் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளேனா? யாரிடமும் கை கட்டி நிற்கத் தயாராக இல்லை, வீடியோவை யார் எடுத்தது, எதைச் சேர்த்தார்கள், சிலதை ஏன் நீக்கினார்கள் என்பது எனக்குப் புரியவே இல்லை. முழுமையான வீடியோ வெளிவந்தால்தான், எல்லோருக்கும் உண்மை புரியும்.

எங்களுடைய ஐடி பிரிவில் இருந்தே வீடியோ வருவது நன்றாக இருக்கிறதா? இது நியாயமா? என்னை அசிங்கப்படுத்தவே வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. இதுகுறித்துத் தெரியவந்தபோது என்னைக் கூப்பிட்டுப் பேசியிருக்கலாமே?

அதிருப்தி இருக்கிறது என்றால் டிடிவி தினகரனுடன் தனியாகப் பேசுவேன். இதுபோன்று செய்ய மாட்டேன். அமமுகவால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, தொடர்ந்து நிறையப் பேர் வெளியேறுகிறார்கள். இதைப் பார்த்தால் எனக்கு வருத்தமாக இருக்கிறது.

பெங்களூருவில் சிறைக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்த பின் அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கையை மேற்கொள்வேன். இதுவரை எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை'' என்று புகழேந்தி தெரிவித்துள்ளார்.

அமமுகவின் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து கட்சியை விட்டு விலகிவரும் சூழலில், புகழேந்தியின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x