Published : 01 Sep 2019 04:17 PM
Last Updated : 01 Sep 2019 04:17 PM

வங்கிகள் இணைப்பு மூலம் ஒரு ஊழியருக்குக் கூட வேலை பறிபோகாது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி

சென்னை,

வங்கிகள் இணைப்பு மூலம் ஒரு ஊழியருக்குக் கூட வேலை பறிபோகாது என்பதை ஒவ்வொரு வங்கி ஊழியர் சங்கத்துக்கும் உறுதியளிக்கிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரச் சலுகைகள் குறித்து அறிவித்தார். அப்போது, 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளின் கீழ் கொண்டுவரும் அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அதாவது, இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியுடன், ஆந்திரா வங்கி, கார்ப்ரேஷன் வங்கியும், கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைட்டெட் பேங் ஆப் இந்தியா வங்கியும் இணைக்கப்பட உள்ளது.

ஆனால், வங்கிகள் இணைப்புக்கு வங்கி ஊழியர்கள் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. வங்கி ஊழியர்கள் பலர் வேலையிழப்பைச் சந்திப்பார்கள், மத்திய அரசு இதைக் கைவிட வேண்டும் எனக் கோரி நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சென்னை வந்திருந்தார். அப்போது செய்தியாளர் சந்திப்பில், வங்கிகள் இணைப்பின் மூலம் ஊழியர்கள் பலருக்கு வேலை பறிபோகும் என்பதாக வங்கி ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளதே என நிர்மலா சீதாராமனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில், " இந்தத் தகவல் தவறானது. நான் கடந்த வெள்ளிக்கிழமை என்ன கூறினேன் என்பதை ஒவ்வொரு வங்கி ஊழியர் சங்கமும் சிந்தித்துப் பாருங்கள். வங்கிகள் இணைப்பு குறித்து நான் பேசும்போது, வங்கிகளைச் சேர்ந்த ஒரு ஊழியருக்குக் கூட வேலை பறிபோகாது என்று கூறினேன். இதை அனைத்து ஊழியர்கள் சங்கத்திடமும் உறுதியளிக்கிறேன்.

சமீபத்தில் நிதியமைச்சகம் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் அனைத்துத் துறைகளுடன் நடத்திய பேச்சுக்குப் பின் அறிவிக்கப்பட்டது. பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுடன் மத்திய அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது. என்னை வந்து சந்திக்கும் ஒவ்வொரு துறையின் பிரதிநிதியுடன் நான் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறேன்'' என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x