Published : 30 Aug 2019 04:49 PM
Last Updated : 30 Aug 2019 04:49 PM

இங்கிலாந்து எம்.பி.க்களுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு: என்ன பேசினார்?

முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி, இங்கிலாந்தில் உள்ள எம்.பி.க்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள், பிற முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகளை தமிழகத்துக்கு ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

14 நாட்கள் சுற்றுப் பயணத்தில் நேற்று சுகாதாரத்துறை தொடர்பான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் இன்று லண்டன் நாடாளுமன்ற எம்.பி.க்களைச் சந்தித்துப் பேசினார் முதல்வர் பழனிசாமி.

இங்கிலாந்து நாடாளுமன்ற கூட்ட அரங்கில், தமிழ்நாட்டில் செயல்படுத்தும் சுகாதாரத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்த முதல்வர், நகர உட்கட்டமைப்பு, வீட்டு வசதி, பசுமை எரிசக்தி ஆகிய துறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என அங்குள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதைத்தொடர்ந்து இங்கிலாந்து எம்.பி.க்களுடன் முதல்வர் பழனிசாமி சுமார் அரை மணிநேரம் உரையாற்றியுள்ளார். அப்போது மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்வதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிறந்த மருத்துவர்களையும் செவிலியர்களையும் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள் இலவசமாக சிகிச்சை அளித்து வருவது குறித்தும் முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள சுகாதாரத்துறையின் வளர்ச்சிப் பணிகளையும் கடந்து வந்த பாதை பற்றியும் இங்கிலாந்து எம்.பி.க்களிடம் விரிவாக முதல்வர் பேசினார்.

இந்த சந்திப்பின்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அத்துறையின் தலைமைச் செயலர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து லண்டனில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்புகளையும் முதலீட்டாளர்களையும் தொழில் நிறுவனர்களையும் முதல்வர் சந்தித்துப் பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x