Last Updated : 28 Aug, 2019 04:47 PM

 

Published : 28 Aug 2019 04:47 PM
Last Updated : 28 Aug 2019 04:47 PM

பெரியவாரை பாலத்தில் லாரிகள் செல்ல முடியாததால் மூணாறுக்கு காய்கறிகளை கொண்டு செல்வதில் சிக்கல்

மூணாறு,

மூணாறு பெரியவாரை பாலத்தில் லாரிகள் செல்ல முடியாததால் மறையூர், உடுமலைப்பேட்டை பகுதி காய்கறிகளைக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் லாரி வாடகை அதிகரித்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது.

மூணாறில் நயமக்காடு, கன்னிமலை, தலையாறு, வாகுவாரை, குண்டுமலை, தென்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெருக்கெடுத்து வரும் நீர் பெரியவாரை வழியே ஹெட்வொர்க்ஸ் அணைக்குச் செல்கிறது.

இதற்காக இப்பகுதியில் பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு வெள்ளப்பெருக்கின்போது இது அடித்துச் செல்லப்பட்டது. பின்பு இரண்டு முறை தரைப்பாலம் அமைத்தும் அதிக நீரோட்டத்தினால் உருக்குலைந்தது.

கடந்த மாதம் பெய்த மழைக்கு இந்த தற்காலிக பாலம் முற்றிலும் சேதமடைந்தது. இதனால் மறையூர், கோவிலூர், உடுமலைப்பேட்டை வழித்தட போக்குவரத்து தற்போது வரை பாதிக்கப்பட்டுள்ளது.

நீரோட்டம் தொடர்வதால் தற்காலிகமாக இவை சீரமைக்கப்பட்டு இலகுரக வாகனங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.

இதனால் பேருந்துகள் அனைத்தும் மூணாறுக்கு வர முடியாமல் பெரியவாரை பாலத்திற்கு அந்தப்பக்கம் நிறுத்தப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த இடம் வரை ஆட்டோ, ஜீப்பில் கட்டணம் செலுத்தி பின்பு பேருந்தில் பயணிக்க வேண்டியதுள்ளது.

லாரி போன்ற கனரக வாகனங்கள் வரமுடியாததால் காய்கறி வரத்து வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

மறையூர், கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் கேரட், பீன்ஸ், பட்டர்பீன்ஸ், கோஸ் உள்ளிட்டவை அதிகளவில் பயிரிடப்படுகின்றன. மேலும் ஒட்டன்சத்திரம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான காய்கறிகள் தினமும் மூணாறுக்கு வருகிறது.

தற்போது பாலத்தில் லாரிகள் வர முடியாததால் பாலத்தின் ஒருபகுதியில் நிறுத்தப்பட்டு மூடைகள் ஜீப்களில் மாற்றப்பட்டு கொண்டு வரப்படுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு கூடுதல் செலவினம் ஏற்படுகிறது. சில வியாபாரிகள் குண்டுமலை, மாட்டுப்பட்டி, சென்டுவாரை முக்கிய சாலை வழியே மூணாறுக்கு கொண்டு செல்கின்றனர். இந்த ரோடு மிக குறுகியதாகவும், பல இடங்களில் ரோடு சிதிலமடைந்தும் இருப்பதால் லாரிகளுக்கு கூடுதல் வாடகை தர வேண்டியதுள்ளது.

இது குறித்து குண்டுமலையைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவர் கூறுகையில், "எஸ்டேட்களுக்குத் தேவையான தளவாடச் சாமான்கள் உள்ளிட்ட பல பொருட்களை கொண்டு வருவதிலும் சிரமம் உள்ளது.

லாரி வர முடியாததால் லாரி வாடகை அதிகரித்து, காய்கறிகளின் விலையும் மூணாறில் அதிகரித்துள்ளது. எனவே இப்பாலத்தை விரைந்து சரி செய்ய வேண்டும். தரமற்ற முறையில் பாலம் அமைக்கப்பட்டதால் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது. எனவே நிரந்தரத் தீர்வாக வலுவான பாலத்தை கட்ட வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x