Last Updated : 20 Jul, 2015 07:55 AM

 

Published : 20 Jul 2015 07:55 AM
Last Updated : 20 Jul 2015 07:55 AM

வருமான வரி தாக்கலுக்கான புதிய படிவம் இன்றுமுதல் விநியோகம்: கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிப்பு

வருமான வரி தாக்கல் செய்வதற்காக எளிமையாக்கப் பட்ட புதிய படிவம் வருமான வரி அலுவலகத்தில் இன்று முதல் விநியோகம் செய்யப் படுகிறது. வருமான வரித் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரிதாக்கல் செய்வதற்கான கடைசி நாள் இம்மாதம் 31-ம் தேதியாக இருந்தது. இந்நிலையில், வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் வரிதாரர்கள் வெளிநாடுகளுக்குச் சென்ற விவரங்கள், வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத் தொகை போன்றவற்றை குறிப்பிட வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல தரப்பிலும் இருந்து எதிர்ப்பு வந்ததையடுத்து, வெளிநாட்டு பயண விவரங்கள் வருமான வரி தாக்கல் படிவத்தில் குறிப்பிடத் தேவையில்லை. இதற்குப் பதிலாக பாஸ்போர்ட் எண்ணைக் குறிப்பிட்டால் போதும் என்று மத்திய அரசு அறிவித்தது.

மேலும், வரி தாக்கல் செய்வதற்காக வரிக் கணக்குப் படிவங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 14 பக்கங்கள் கொண்ட வருமான வரி தாக்கல் படிவம் தற்போது மூன்று பக்கங்கள் கொண்டதாக எளிதாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், வரி செலுத்து பவர்கள் படிவத்தை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும். இப்புதிய படிவங்கள் சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் `தி இந்து’விடம் கூறியதாவது:

இந்த ஆண்டு வருமான வரித் தாக்கல் செய்வதற்காக எளிமையாக்கப்பட்ட `ஐடிஆர்-1, 2, 2ஏ, 4எஸ்’ என நான்கு படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மாதச் சம்பளம் பெறுபவர்கள் நான்கு பக்கங்களைக் கொண்ட ஐடிஆர்-1 (சஹாஜ்) என்ற படிவம் மூலம் வரி தாக்கல் செய்ய வேண்டும். வணிக வருமானம் கொண்டவர்களுக்கு ஐடிஆர்-4எஸ் (சுகம்), ஐடிஆர்-2ஏ என்ற புதிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வியாபாரம் மற்றும் மூலதன ஆதாயம் இல்லாத நபர்கள் மற்றும் வெளிநாட்டில் சொத்து இல்லாதவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் மூலம் வருமானம் மற்றும் லாட்டரி போன்றவற்றின் மூலம் வருமானம் பெறுபவர்களும் ஐடிஆர்-2ஏ படிவத்தை பயன் படுத்த வேண்டும்.

மேலும், முன்பு வங்கிக் கணக்குகளில் இருக்கும் தொகையைக் குறிப்பிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய படிவத்தில் வங்கி சேமிப்புக் கணக்கு எண் மற்றும் ஐஎப்எஸ் கோடு எண்ணை மட்டும் குறிப்பிட்டால் போதுமானது. வரிதாரர்களின் வசதிக்காக வருமான வரி தாக்கல் செய்வதற் கான இறுதி தேதி ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x