Published : 23 Jul 2015 08:54 AM
Last Updated : 23 Jul 2015 08:54 AM

சென்னையில் 22 வீடுகளில் திருடிய கணவன்-மனைவி கைது: 210 பவுன், 10 கிலோ வெள்ளி பறிமுதல்

சென்னையில் ஆட்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட தம்பதியை போலீஸார் நேற்று கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக இந்த தம்பதியினர் 22 வீடுகளில் திருடியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் கடந்த வாரத்தில் 4 வீடுகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள் திருடுபோயின. இந்த நிலையில் நேற்று காலையில் சைதாப்பேட்டை கவரை தெரு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் சந்தேகத்தின் பேரில் ஒரு இரு சக்கர வாகனத்தை சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரானிக் கட்டர் கருவி குறித்து வாகனத்தை ஓட்டி வந்த கர்ண பிரபு(30) அவரது மனைவி சவுமியா(30) ஆகியோரிடம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

கர்ண பிரபுவின் கைரேகையை கடந்த வாரம் திருட்டு நடைபெற்ற வீடுகளில் கிடைத்த கைரேகைகளுடன் ஒப்பிட்டபோது இரண்டும் ஒரே மாதிரியாக இருந்தன. இதனால் போலீஸார் தீவிர விசாரணை நடத்தியபோது கடந்த 5 ஆண்டுகளாக அவர் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

கர்ண பிரபு(30) ஆந்திர மாநிலம் விஜயவாடாவை பூர்வீகமாகக் கொண்டவர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு வந்து ஊதுபத்தி வியாபாரம் செய்து வந்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பு சவுமியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தி.நகரில் ஒரு வீட்டில் ஊதுபத்தி விற்பனைக்கு சென்றபோது வீட்டின் முன் அறையில் வைக்கப்பட்டிருந்த கைப்பையை கர்ண பிரபு திருடினாராம். அதில், 7 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம் இருந்தது. கஷ்டமில்லாமல் பெரும் தொகை கிடைத்ததால் இதையே தொடர முடிவு செய்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு சைதாப்பேட்டை பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.

ஊதுபத்தி விற்பனை செய்வதுபோல் இந்த தம்பதி பைக்கில் சென்று பூட்டிக் கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு பூட்டுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். மனைவி வீட்டுக்கு வெளியே நின்று கண்காணிக்க, கணவன் வீட்டுக்குள் சென்று கிடைக்கும் பொருட்களை சுருட்டிக் கொண்ட பிறகு இருவரும் பைக்கில் ஏறி தப்பிச் சென்றுவிடுவார்களாம்.

இதுவரை போலீஸில் சிக்காத இந்த தம்பதி 22 வீடு களில் திருடியுள்ளதாக தெரிவித்தனராம். போலீஸார் அவர்களிட மிருந்து 210 பவுன் நகை, 10 கிலோ வெள்ளிப் பொருட்கள், 3 இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இருவரையும் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், அடகு வைக்கப்பட்டுள்ள 193 பவுன் நகைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு வேறு திருட்டுச் சம்பவங்களில் உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்துவதற்காக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x