Published : 18 Aug 2019 11:30 AM
Last Updated : 18 Aug 2019 11:30 AM

சம்ஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிக்கவே இந்தி முன்னிறுத்தப்படுகிறது: கலை இலக்கிய பெருமன்ற பயிலரங்கில் குற்றச்சாட்டு

திருவாரூர்

எதிர்காலத்தில் சம்ஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிக்கவே இந்தி மொழி முன்னிறுத்தப்படுவதாகத் தோன்றுகிறது என தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்ற பயிலரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற, தஞ்சை மண்டல அளவிலான கலை இலக்கிய பயிலரங்கம் மன்னார்குடியில் நேற்று தொடங்கியது. மாவட்டத் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் இரா.காமராசு, முன்னாள் எம்எல்ஏ வை.சிவபுண்ணியம் ஆகியோர் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினர்.

கருத்தரங்கில், ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற தலைப்பில் பேராசிரியர் பா.மதிவாணன் பேசிய தாவது: மத்திய அரசு, இந்திக்கு மட்டுமின்றி அந்தந்த மாநிலத்தின் தாய்மொழிகளுக்கும் முக்கியத்து வம் தர வேண்டும்.

இந்தி ஒரு கலப்பு மொழியாகும். இந்திக்கு, சம்ஸ்கிருதம் மற்றும் தேவநாகரீகம் என்ற இரு வடிவங்களில் எந்த வடிவத்தை ஏற்பது என்ற இருவேறு கருத்துகள் இன்றளவும் நிலவுகின்றன.

தற்போதைய சூழலைப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் சம்ஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிக்கவே இந்தி மொழி முன்னிறுத் தப்படுவதாகத் தோன்றுகிறது. இந்தியைப் படித்தால், ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய அளவுக்கு, தமிழைப் படித்தால் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்ற நம்பிக்கையை நாம் ஏற்படுத்தத் தவறிவிட்டோம்.

குறிப்பாக, மாணவர்களிடம் தமிழ் ஆர்வத்தைத் தூண்டும் பணி தற்போது தமிழ் ஆசிரியர்களிடம் வெகுவாகக் குறைந்துவிட்டது. மாணவப் பருவத்திலேயே தமிழ் மொழியின் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதன் மூலம்தான், தமிழ் மொழியின் சிறப்பை அதன் தன்மை மாறாமல் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்ல முடியும் என்றார்.

‘பெருமன்றம் வரலாறும், சவால்களும்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.கே.கங்கா பேசினார். முன்னதாக கலை இலக்கிய பெருமன்ற மாவட்டச் செயலாளர் முரளி வரவேற்றார். முடிவில் செல்வக்குமார் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x