Published : 16 Aug 2019 12:01 PM
Last Updated : 16 Aug 2019 12:01 PM

வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடித்தல் கூடாது: தொண்டர்களுக்கு மதிமுக கட்டளை

சால்வை போர்த்துதல் கூடாது. அதற்கு பதில் கட்சி நிதி கொடுக்கலாம் என மதிமுக தலைமைக் கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்கும் கூட்டங்களில் தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக்கூடாது. வெடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கழகத் தோழர்கள் ஆர்வமிகுதியால் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதனால் போக்குவரத்து இடையூறும், தீ விபத்து ஏற்படும் அபாயமும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும் நிகழ்கின்றது.
எனவே பட்டாசு வெடிப்பதை கட்சித் தோழர்கள் கண்டிப்பாகக் கைவிட வேண்டும். இதனை மீறிச் செயல்படுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று தெரிவித்துள்ளது.

மாலை அணிவிப்பது முதல் பரிசளிப்பு வரை - பின்னணி:

திராவிடக் கட்சிக்கு முந்தைய ஜஸ்டிஸ் கட்சிக் கூட்டங்களில் தலைவர்களைச் சந்திக்கும்போது மரியாதை செலுத்துவது, மாலை அணிவிப்பது சாதாரண நிகழ்வாக இருந்தது. திராவிடர் கழகத்தில் புத்தகம் பரிசளிப்பது வழக்கமாக இருந்தது.

திமுக தொடங்கிய பின்னர் நெசவாளர்கள் பஞ்சத்தில் இருந்து மீட்க கைத்தறி ஆடையை ஊக்குவிக்கும்விதமாக தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் கைத்தறி ஆடை அணியும் பழக்கம் வந்தது. அப்போது தலைவர்களைச் சந்திக்கும் தொண்டர்கள் மாலைக்குப் பதில் கைத்தறித் துண்டுகளை அணிவிக்க வேண்டும் என திமுக தலைமை உத்தரவிட்டது.

அதன்பின்னர் அரசியல் கூட்டங்களில் மாலைக்குப் பதில் கைத்தறித் துண்டு அணிவிக்கும் பழக்கம் பின்னர் பட்டு உள்ளிட்ட சால்வை அணிவிக்கும் ஆடம்பரப் பழக்கமாக மாறியது. சமீபத்தில்கூட திமுக தலைவர் சால்வைக்குப் பதில் புத்தகங்களைப் பரிசளிக்கக் கேட்டிருந்தார்.

ஆனாலும் எந்த நோக்கத்துக்காக கைத்தறி சால்வை அணியும் பழக்கம் ஏற்படுத்தப்பட்டதோ அது பட்டு சால்வை கலாச்சாரமாக மாறிப்போனது. தற்போது 1000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை விலையுள்ள பூங்கொத்து வழங்கும் கலாச்சாரம் உருவாகியுள்ளது.

பூங்கொத்து கொடுப்பதை கவுரவமான ஒன்றாக அரசு அதிகாரிகள் கடைபிடித்த காலம்போய் அரசியல் தலைவர்களும் கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையை மாற்ற பலரும் அவ்வப்போது அறிக்கைவிட்டாலும் அது தொடர்கதையாகத்தான் உள்ளது.

பட்டாசு வெடிப்பது குறித்து திமுக தலைமையும் ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்த நிலையில் இன்று மதிமுக தலைமைக்கழகமும் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கும் கூட்டங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது, மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல், நீர் நிலை பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் அதீத அக்கறை கொண்ட தலைவர் வைகோவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x