Published : 16 Aug 2019 10:56 AM
Last Updated : 16 Aug 2019 10:56 AM

நீலகிரியில் குத்தகைதாரருக்கே நிவாரணம்; சீமான் வலியுறுத்தல்

உதகை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் விவசாயம் செய்த குத்தகைதாரர்களுக்குத்தான் நிவாரணம் வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்ர்.

நீலகிரி மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட தேசங்களை ஆய்வு செய்வதற்காக சீமான் நேற்று மாலை உதகை வந்தார். உதகை அருகே குருத்துக்குளி கிராமத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்த விமலா, சுசீலாவின் உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் கப்பத்தொரை மற்றும் முத்தொரை பாலாடா கிராமங்களில் மழை வெள்ளத்தால் மூழ்கிய விவசாய நிலங்களைப் பார்வையிட்டார். அங்கு மக்கள் அவரிடம் தங்கள் குறைகளைத் தெரிவித்தனர். சிலர் மனுக்களை அளித்தனர். அங்கிருந்த அப்போது, வயதான மூதாட்டி ஒருவர் கண்ணீர் மல்க தன் நிலையைக் கூறியது அங்கிருந்தவர்களைக் கலங்க வைத்தது.

பின்னர், சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நீலகிரியில் மழையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிர் பலி ஏற்பட்டு 6 பேரின் குடும்பங்கள் நிர்க்கதியாகி நிற்கின்றன. இறந்த சுசீலா மற்றும் விமலா ஆகியோரின் மகன்கள் சமவெளிப் பகுதிகளில் வேலை செய்கின்றனர். இறந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர் வாரியிருந்தால் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்காது. அரசின் மெத்தனமே இதற்குக் காரணம். நிலமற்ற விவசாயிகள்தான் குத்தகை எடுத்து விவசாயம் செய்கின்றனர். அவர்களுக்குத்தான் இழப்பீடு வழங்க வேண்டும். அதிமுக மற்றும் திமுக இரண்டும் மாறி மாறிக் குறை கூறாமல் நிவாரணப் பணிகளைச் செய்ய வேண்டும்.

கேரளாவில் மரங்களை வெட்டி வீடு கட்டியதால்தான் நிலச்சரிவு ஏற்பட்டது என்று ஆய்வு கூறுகிறது. நீர்நிலைகளின் அருகே பொதுமக்களைக் குடியமர்த்தக் கூடாது. ஏழைகளை வீடு கட்ட அனுமதித்து விட்டு, பின்னர் மின்சாரம் வழங்கி விட்டு, வீட்டு வரி வசூல் செய்துகொள்கின்றனர். பின்னர் அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறுகின்றனர். இவர்களை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருந்தால் இந்த உயிரிழப்புகள் மற்றும் பாதிப்பு ஏற்பட்டிருக்காது''.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

ஆய்வின் போது, நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் சகாதேவன், இணைச் செயலாளர் ஜெயகுமார், பொருளாளர் பிரேம்நாத் பீமன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x