Published : 16 Aug 2019 09:24 AM
Last Updated : 16 Aug 2019 09:24 AM

ஹைட்ரோகார்பனுக்கு எதிராக தீர்மானம்: திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தில் பல ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தங்கள் கிராமங்களில் செயல்படுத்தக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பைங்காநாடு, பாலையக்கோட்டை, ராதாநரசிம்மபுரம், எளவனூர், கன்னியாக்குறிச்சி, சேரன்குளம், நெம்மேலி, பனையூர், ஆலங்கோட்டை, கருணாவூர், வடகாரவயல், கெளுவத்தூர், பெருகவாழ்ந்தான், செட்டித்தெரு, உள்ளிட்ட கிராமங்களில் தங்களது கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் மீத்தேன், ஷேல்காஸ், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தக் கூடாது, தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் எவ்வித பணியையும் மேற்கொள்ளக் கூடாது என பொதுமக்கள் தன்னெழுச்சியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதுதொடர்பாக, காவிரி உரிமை மீட்புக்குழு திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாரதிச்செல்வன் கூறும்போது, "சட்டத்துக்குட்பட்டு கிராம சபை கூட்டத்தில் இந்த தீர்மானங்களை பொதுமக்கள் தன்னெழுச்சியாக அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தீர்மானங்களை ஒருசில அதிகாரிகள் முதலில் ஏற்க முன்வராத நிலையிலும், அதிகாரிகளுக்கு புரிய வைத்து, மக்கள் தங்களுடைய நியாயமான கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளனர்" என்றார்.

ஆட்சியர் பங்கேற்பு

திருவாரூர் வட்டம் கீழகாவதுகுடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் த.ஆனந்த் பங்கேற்று, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான காப்பீடு அட்டை மற்றும் மரக்கன்றுகளை வழங்கினார். மேலும், பொதுமக்களிடம் சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர், ஆட்சியர் பேசும்போது, ‘‘மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்து வம் தர வேண்டும். மறு சுழற்சி முறையில் தண்ணீரை பயன்படுத்த பழகிக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

வெளிநடப்பு

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் புழுதிக் குடி ஊராட்சிக்குட்பட்ட சோழங்க நல்லூரில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், நேற்று சுதந்திர தினத்தையொட்டி புழுதிக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் சமூக ஆர்வலர், வழக்கறிஞர் ராஜேஷ் தலைமையில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியின்றி, சோழங்கநல்லூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற முயற்சிப்பதாகக்கூறியும், இத்திட் டத்தை, தங்களது கிராமத்தில் செயல்படுத்தக் கூடாதென வலியுறுத்தியும் கிராம சபை கூட்டத்தை நடத்த வந்திருந்த புழுதிக்குடி ஊராட்சி செயலாளர் (பொ) சேகர் மற்றும் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர் முருகையன் ஆகியோரிடம் மனு அளித்தனர்.

இதை உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதலின்றி பெற்றுக்கொள்ள முடியாது என ஊராட்சி செயலாளர் கூறினார். இதைக் கேட்ட பொதுமக்கள், கிராம சபை கூட்டத்தைப் புறக்கணிப்பதாகக் கூறி, கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x