Published : 14 Aug 2019 07:43 PM
Last Updated : 14 Aug 2019 07:51 PM
தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் காஷ்மீர் விவகாரத்தில் எதை அரசியலாக்கவேண்டும், எதை அரசியலாக்கக்கூடாது என்பதை உணர்ந்து நடக்கவேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக்கொள்ள அமித்ஷா சென்னை வந்திருந்தார், அப்போது பேசிய நடிகர் ரஜினிகாந்த் காஷ்மிர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டிப் பேசினார்.
தனது பேச்சினூடே அமித்ஷா, மோடி இருவரும் கிருஷ்ணர், அர்ஜுனர் போன்றவர்கள், இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜுனன் என்பது எனக்குத் தெரியாது அது அவர்கள் இரண்டுப் பேருக்குத்தான் தெரியும் என பேசினார்.
காஷ்மிர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை தமிழகத்தில் பாஜக, அதிமுக தவிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்த்து வரும் நிலையில், இந்தியா முழுதும் காஷ்மிர் விவகாரம் விவாதப்பொருளாக ஆகியுள்ள நிலையில் பாஜக ஆதரவு நிலை எடுப்பவர் என விமர்சிக்கப்படும் ரஜினியின் இந்தப் பேச்சு விவாதத்தை கிளப்பியது.
ரஜினியிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும் என திருமா வளவன் போன்றோர் விமர்சித்திருந்தனர். திமுக தலைமையில் அனைத்துக்கட்சிக்கூட்டம் நடந்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் தமிழக அரசியல்வாதிகள் காஷ்மிர் விவகாரத்தில் நடக்கவேண்டியது குறித்து கருத்தை ரஜினி கூறியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன் செய்தியாளர்களுக்கு ரஜினி அளித்தப்பேட்டி:
தேசிய விருதில் தமிழ் திரைப்படங்கள் பெயர் இல்லையே?
எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது, அதை என்னவென்று ஜூரிகள்தான் முடிவு செய்யணும்.
சமீபத்தில் மோடியையும், அமித் ஷாவையும் கிருஷ்ணர், அர்ஜுனர் என நீங்கள் பேசியது இந்தியா முழுதும் விவாதப்பொருளாக மாறியுள்ளதே?
காஷ்மீர் விஷயத்தை அவர்கள் கையாண்ட விதம், ஒரு ராஜதந்திரத்தோடு கையாண்டுள்ளார்கள். கிருஷ்ணர், அர்ஜுனன் என்றால் ஒருத்தர் பிளான் தருபவர் அதை இன்னொருவர் செயலாற்றுபவர். காஷ்மீர் விஷயம் எவ்வளவு பெரிய விஷயம். அது இந்த நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது.
அந்த காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் ஒரு தாய்வீடாக உள்ளது. இந்தியாவுக்குள் அவர்கள் ஊடுருவ ‘கேட்வே ஆஃப் இந்தியா’ மாதிரி காஷ்மீர் உள்ளது. அதை அவர்கள் கைப்பிடிக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காக ஒரு ராஜதந்திரமாக முதலில் 144 தடை கொண்டு வந்து, அங்கு பிரச்சினை செய்பவர்களை ஒரு வீட்டுச் சிறை மாதிரி உருவாக்கி என்ன செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்க அவர்களை உள்ளே வைத்து,
ராஜ்யசபாவில் மெஜாரிட்டி இல்லை என்பதற்காக அங்கு முதலில் வைத்து பில் பாஸ் செய்து, அதற்கு பின்னர் மக்களவையில் பாஸ் பண்ணியிருக்காங்க. இது அருமையான ராஜதந்திரம். ஆகவே இது தெரிஞ்சிருந்தா அதை விவாதப்பொருளாக மாற்றி அனைத்து விஷயமும் தெரிந்து அவர்கள் திணறிப்போயிருப்பார்கள். இதை நிறைவேற்ற ஒத்துக்க மாட்டாங்க.
தயவு செய்து நமது அரசியல்வாதிகள் எதை அரசியலாக்கணும் உணர்ந்துக்கொள்ளணும். இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம்.
இதை அனைவரும் எதிர்க்கிறார்களே?
அதைத்தானே சொல்கிறேன், எதை அரசியலாக்கணும் எதை அரசியலாக்கக்கூடாது என்று மதிப்பிற்குரிய சில அரசியல்வாதிகள் முதலில் புரிந்துக்கொள்ளணும்.
சித்திரை 1 அரசியல் கட்சி தொடங்குவதாக சொன்னீர்கள் ?
அதை நான் சொல்கிறேன், அது எப்போது என்று கண்டிப்பாக உங்களை எல்லாம் அழைக்காமல் கூப்பிடாமல், சொல்லாமல் இருக்கமாட்டேன்
போயஸ் கார்டன் மீண்டும் அரசியல் மையமாக மாறுமா?
பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு ரஜினிகாந்த் பதிலளித்தார்.