கி.மகாராஜன்

Published : 14 Aug 2019 14:03 pm

Updated : : 14 Aug 2019 14:03 pm

 

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு கைவிடப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்

rajendra-balaji-case

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் விசாரணையின் அடிப்படையில் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பொதுத்துறை தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்படாததால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில்,"அமைச்சர் பதவியை பயன்படுத்தி 2011 முதல் 2013 வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் தொடர்பாக விசாரிக்கப்பட்டதில் புகாரில் முகாந்திரம் இல்லை எனத் தெரியவந்ததால் விசாரணை கைவிடப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையேற்க மறுத்த நீதிபதிகள், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி 1996-ல் திருத்தங்கல் டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவராக பதவி வகித்தது முதல் தற்போது வரை அவருடைய வருமானம் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று (ஆக.,14) விசாரணைக்கு வந்தது. அப்போது, லஞ்ச ஒழிப்பு இயக்குநர் சார்பிலும், தமிழக பொதுத்துறை செயலர் சார்பிலும் சீலிட்ட கவரில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில்," விசாரணையின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல்நடவடிக்கை கைவிடப்பட்டது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து நடவடிக்கை கைவிடப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப்படாததால், சொத்து குவிப்பு வழக்கு விசாரணையின் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தமிழக பொதுத்துறை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிசொத்து குவிப்பு வழக்கு

Popular Articles

You May Like

More From This Category

More From this Author