Published : 05 Aug 2019 01:12 PM
Last Updated : 05 Aug 2019 01:12 PM

நேர்மையாகத் தேர்தலைச் சந்திக்கும் கட்சி அதிமுகதான்: அமைச்சர் நிலோஃபர் கபில்

மிகவும் நேர்மையாக தேர்தலைச் சந்திக்கும் கட்சி அதிமுகதான் என்று அமைச்சர் நிலோஃபர் கபில் தெரிவித்துள்ளார். 

வேலூர் மக்களவைத் தேர்தல் இன்று (ஆக. 5) நடைபெற்று வருகிறது. வேலூர் வாக்களித்த அமைச்சர் நிலோஃபர் கபில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ''இந்த நாள் நமது திருநாளாகவும் வெற்றி நாளாகவும் இருக்கும். ஜெயலலிதாவின் திட்டங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அவரின் வழியில் செயல்படும் முதல்வர், துணை முதல்வர் தலைமையில் கட்சித் தொண்டர்கள் தேர்தலில் வெற்றிபெறப் பாடுபட்டுள்ளனர். கடந்த தேர்தலில் ஏமாந்துவிட்டோம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். 

இதனால் இந்த முறை வெற்றி இரட்டை இலைக்கே. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெறுவார். திமுகவைப் போல, அதிமுக சார்பில் எந்தப் பணப்பட்டுவாடாவும் செய்யப்படவில்லை. அதிமுக மிகவும் நேர்மையாகத் தேர்தலைச் சந்தித்துள்ளது.

முத்தலாக் விவகாரத்தில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அதிமுகவுக்குக் கிடைக்காது என்பது தவறான கருத்து. 100 சதவீதம் இஸ்லாமிய மக்களின் ஆதரவு எங்களுக்கு உண்டு. திமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எந்தத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவில்லை. ஆனால், அதிமுகவின் ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 

இந்தப் பொற்கால ஆட்சியில் மதக் கலவரமோ, சாதிக் கலவரமோ நடக்கவில்லை. நாங்கள் நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்'' என்றார் அமைச்சர் நிலோஃபர் கபில்.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x