Last Updated : 30 Jul, 2019 05:32 PM

 

Published : 30 Jul 2019 05:32 PM
Last Updated : 30 Jul 2019 05:32 PM

குமரி பகவதியம்மன் கோயில் இடத்துக்கு ரூ.1.76 கோடி வாடகை பாக்கி: பூம்புகார் கப்பல் கழகத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

குமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான இடத்துக்கான வாடகை பாக்கி ரூ.1.76 கோடியை வட்டியுடன் செலுத்தக்கோரிய வழக்கில் பூம்புகார் கப்பல் கழகம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

கன்னியாகுமரியில் பகவதி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2.03 ஹெக்டேர் இடம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் 12,431 சதுரடி காலி இடம் பூம்புகார் கப்பல் கழகத்துக்கு 1984-ல் வாடகைக்கு விடப்பட்டது. இந்த இடத்துக்காக கோயில் நிர்வாகத்துக்கு பூம்புகார் கப்பல் கழகம் ரூ.ரூ.1,76,61,322 வாடகை பாக்கி வைத்துள்ளது.

வாடகை கேட்டபோது அந்த இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது, கோயிலுக்கு வாடகை செலுத்த வேண்டியதில்லை என பூம்புகார் கப்பல் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த இடம் தொடர்பாக 35 ஆண்டுக்கு முன்பு கோயில் நிர்வாகம், பூம்புகார் கப்பல் கழகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, சில ஆண்டுகள் முறையாக வாடகை செலுத்தப்பட்ட நிலையில் இப்போது வாடகை பாக்கியை வழங்க மறுப்பது சட்டவிரோதம்.

எனவே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 12,431 சதுரடி காலி இடத்துக்கு தற்போது வரையுள்ள வாடகை பாக்கியை வட்டியுடன் செலுத்த பூம்புகார் கப்பல் கழகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், பூம்புகார் கப்பல் கழக தலைவர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x