Published : 26 Jul 2019 12:09 PM
Last Updated : 26 Jul 2019 12:09 PM

ராஜராஜ சோழன் இருந்திருந்தால், விமர்சனத்தை ஏற்று உரையாட வந்திருப்பார்; யாருக்காகவும் பயப்படமாட்டேன்: பா.ரஞ்சித் பேச்சு

ராஜராஜ சோழன் உயிருடன் இருந்திருந்தால், என்னுடைய விமர்சனத்தை ஏற்று உரையாட வந்திருப்பார் எனவும் யாருக்காகவும் பயப்பட மாட்டேன் என்றும் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சென்னை, சேத்துப்பட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், ''ராஜராஜ சோழன் குறித்துப் பேசியதை எந்தவொரு இடத்திலும் நான் மறுக்கவில்லை. அவர் தற்போது உயிருடன் இருந்திருந்தால், என்னுடைய விமர்சனத்தை ஏற்று உரையாட வந்திருப்பார். ஆனால் வெவ்வேறு சமூகத்தில் உள்ள ராஜராஜனின் பேரன்கள் அதைக் கேட்டு மன உளைச்சல் அடைந்துள்ளனர்.

குறிப்பிட்டவர்களின் மட்டும் ஏன் நிலம் உள்ளது, எங்களிடம் ஏன் நிலம் இல்லை என்று ஆராய்ந்துள்ளேன். என் பேச்சு பிறரைக் கோபப்படுத்தியிருந்தால், தவறு அவர்களிடம்தான். என்னிடம் இல்லை.

எது உண்மை என்பதில் இங்கு பெரிய பிரச்சினை இருக்கிறது. பெரும்பான்மையினர் ஆதரவு இருந்தால், அது உண்மை. அப்போது சிறுபான்மையினர் பேசுவதில் உண்மை கிடையாதா?

பலம் இல்லையெனில் அது உண்மை இல்லாமல் மாறுகிறது. இது தனிநபர் கருத்து என்றுகூட சொல்லலாம். ஏனெனில் எனது சொந்த சமூகத்திலேயே பல்வேறு கருத்து மாற்றங்கள் இருக்கின்றன. நிறையவே சிக்கல்கள் உள்ளன. அதைமீறி நான் பேச நினைப்பது, உங்களோடு உரையாடலை நிகழ்த்தத்தான். அதற்கான தேவை இருக்கிறது. ராஜராஜ சோழன் பற்றியோ, யாரைப் பற்றி இருந்தாலும் பரவாயில்லை, திறந்த மனதுடன் பேசத் தயாராவோம்.

நாம் அம்பேத்கரின் வளர்ப்பு; யாருக்காகவும் பயப்பட மாட்டேன்'' என்றார் ரஞ்சித்.

ராஜராஜ சோழன் மீதான சர்ச்சைப் பேச்சு தொடர்பாக நீதிமன்றத்தில், பா.ரஞ்சித் முன் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், மீண்டும் இவ்வாறு அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x